செய்திகள்

நாளை தேர்தல்; ஆனால் தோற்கும் பட்சத்தில் ராஜபக்ஸ பதவி விலகுவாரா என்று அச்சம்

நாளை  நடைபெறவிருக்கும் தேர்தலில் தோல்வியடையும் பட்சத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது தோல்வியை ஏற்று பதவி விலகுவாரா என்ற அச்ச நிலை பல்வேறு மட்டங்களில் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் முடிவடைந்து பெறுபேறுகள் வெளிவரும் போது அவை ராஜபக்சவுக்கு சாதகமாக அமையாதுபோனால் தற்போது பல சுகபோகங்களை அனுபவித்து அதிகாரங்களை கையில் வைத்திருக்கும் ராஜபக்ஷ குடும்பத்தினர் இலகுவில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் மன நிலையில் இல்லை என்றும் அதனால் ராஜபக்ஸ அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் பல்வேறு யுக்திகளையும் சதிகளையும் அரங்கேற்றக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

அதற்காக , ஒரு இராணுவ புரட்சி இடம்பெறும் அபாயம் இல்லை என்ற போதிலும், தனக்கு பதவி விலகுவதற்கு இன்னமும் இன்டு ஆண்டுகள் இருப்பதாக கூறி, ராஜபக்ஸ பதவி விலக மறுக்கலாம் என்று சிலர் அஞ்சுவதாகவும் , இது ஒரு பெரும் அரசியலமைப்பு நெருக்கடியை தோற்றுவித்து நாட்டில் ஸ்திரத்தன்மையின்மையை தோற்றுவிக்கலாம் என்றும் இன்டர்நேஷனல் கிரைஸிஸ் குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர் அலன் கீனன் தெரிவிக்கிறார். இந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டு உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு முடியுமாயினும், ஜனாதிபதிக்கு விசுவாசமாக தற்போது இருக்கும் உ ச்ச நீதிமன்றம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வினை இதுவிடயத்தில் வழங்கும் நிலையில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதேவேளை , சிரேஷ்ட ஊடகவியலாளரும் சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான லக்ஷ்மன் குணசேகர இது பற்றி கருத்து தெரிவிக்கையில், ராஜபக்ஷவுக்கு தோல்வி ஏற்படும் பட்சத்தில் எந்தவழி முறையில் என்றாலும் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று நினைக்கின்ற ஒரு கட்டத்தை சாதாரண அரசியலில் பெரிதும் அக்கறை காட்டாத பிரஜைகள் அடைந்திருக்கிறார்கள் என்கின்ற நிலைமையானது எந்தளவுக்கு நாடு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறது என்பதையே காட்டுவதாக கூறுகிறார்.

எவ்வாறெனினும், தேர்தலில் ராஜபக்ஸ தோற்றாலும் “படுமோசமான’ நிகழ்வுகள் இடம்பெறுமென்று தான் நினைக்கவில்லை என்றும் அவ்வாறு அதிகாரத்தை தொடர்ந்தும் தங்கள் கைகளில் வைத்திருக்க மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பமும் அவர்களுக்கு விசுவாசமான சில நண்பர்களும் முயற்சித்தாலும் கூட, அத்தகைய முயற்சிக்கு கணிசமான எந்தவொரு அரசியல் ஆதரவை அல்லது நியாயப்பாட்டை அவர்கள் பெறக் கூடியது சாத்தியமில்லை என்றும் கூறுகிறார்.

மறுபுறத்தில், ராஜபக்ஸ வெற்றி பெறுகின்ற ஒரு சூழ்நிலையில் 2010 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் பலர் மத்தியில் இருப்பதாக கூறும் அலன் கீனன், கடந்த ஒரு மாத காலமாக ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக் கெதிராகவும் அரசுக்கெதிராகவும் விமர்சனம் செய்து வரும் கடந்த காலங்களில் மௌனம் காத்து வந்த பல புத்திஜீவிகள், கலைஞர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறிப்பிடுகிறார்.