செய்திகள்

நகைச்சுவைப் படத்தில் நடிக்க இளவயது இயக்குனர்களிடம் கதை கேட்கும் ரஜினி

லிங்கா வெளியாவதற்கு முன்பிருந்தே மீடியாவில் பரபரத்துக் கொண்டிருக்கும் கேள்விகள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் எது.. யாருக்கு.. யார் இயக்குனர்… யார் ஹீரோயின்? என்பதுதான்.

இந்த கேள்விகளுக்கு நாளும் ஒரு விடையைச் சொல்லி வருகின்றன மீடியாக்கள். ஆனால் ரஜினி தரப்போ அமைதி காக்கிறது. காரணம், லிங்கா விவகாரம் அடுத்தடுத்த புதிய திருப்பங்களைச் சந்தித்து வந்ததால், ரஜினி புதிய பட அறிவிப்பை ஒத்திவைத்தார். தற்போது அந்த பிரச்னை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டதால் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் மீண்டும் பரபரக்க ஆரம்பித்துவிட்டன.

விரைவிலேயே ரஜினி முழுநீள காமெடி படம் ஒன்றி்ல் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர், சில இளவட்ட இயக்குனர்களை அழைத்து கதை கேட்டு வருகிறாராம். குறிப்பாக, சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன்குமாரசாமி, ராஜேஷ்.எம் உள்ளிட்ட வளர்ந்து வரும் இயக்குனர்களிடம் கதை கேட்டிருக்கிறாராம். அப்படி இதுவரை 20 கதைகள் கேட்டுவிட்டாராம்.

ஆனால் அவற்றில் எந்த கதையில் நடிப்பது என்பது குறித்து ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லையாம். தற்போது அவர் இதுதொடர்பாக தனது ஆலோசகர்களிடம் தீவிர பரிசீலனை செய்து கொண்டிருக்கிறாராம். அதனால் ரஜினியிடமிருந்து சீக்கிரமே அடுத்த படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.