செய்திகள்

நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க விருப்பும் சந்தானம்

நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசையாகும். பல புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து பல திரைப்படங்களைத் தயாரிப்பேன் என்றார் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான என்.சந்தானம்.

திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

என்னுடைய தயாரிப்பில் நான் கதாநாயகனாக நடித்து இம்மாதம் 12-ம் தேதி திரைக்கு வர உள்ள இனிமே இப்படித்தான் திரைப்படம் வெளியாகிறது. அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பெண்கள் விரும்பும் வகையில் காமெடி கலந்த கதையம்சம் கொண்ட படமாக என்னுடைய படம் இருக்கும்.

புதிய இயக்குநர்களை வைத்து மேலும் பல திரைப்படங்களைத் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தால் கதாநாயகனாக நடிப்பதோடு, தொடர்ந்து நகைச்சுவை வேடங்களிலும் நடிப்பேன். நடிகர்கள் ஆர்யா, விஷால், உதயநிதி ஸ்டாலின் போன்ற பல நடிகர்களை வைத்து இயக்கும் எண்ணமும் உள்ளது.

தற்போதைய நிலையில் 2 வாரங்கள் படம் ஓடினாலே மிகப்பெரிய வெற்றிதான். இனிமே இப்படித்தான் திரைப்படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் 2 கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர்.

படம் எடுப்பதற்கு பலவித வகைகளில் கஷ்டப்படும் நிலையில், அப்படத்தை திரையிடுவது என்பது அதைவிட கடிமானதாகும்.

நடிகர் வடிவேலு நடித்து இம்மாதம் 19-ம் தேதி வர உள்ள எலி படத்துக்கு முன்னதாக, இனிமே இப்படித்தான் திரைப்படம் வெளியிடுவதற்கு வேறு ஏதும் காரணமில்லை. அவரை முந்திக் கொண்டு நான் திரைப்படத்தை வெளியிடவில்லை. அவரும் என்னால் பின்தங்கவில்லை.

படத்தை தயாரிóத்து, அனைத்துப் பணிகளையும் முடிப்பது என்பது ஒவ்வொரு படத்துக்கும் வேறுபடும். அந்த வகையில் என்னுடைய படப்பணிகள் அனைத்தும் முடிந்ததால் தற்போது திரையிடுகிறேன்.

தற்போதைய போக்கு மாறிவிட்டது. முகநூல், சுட்டுரை போன்ற சமூத்தளங்களில் விமர்சனங்கள் நிறைய வருகின்றன. பேயை வைத்து படம் எடுத்தால்தான் அந்தபடம் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது. நல்ல கதை கொண்ட படம் வெற்றி பெறுகிறது. ஆனால், சில நேரங்களில் சில படங்களைத் தோல்வியைத் தழுவுகின்றன.

நான் பல நடிகர்களுடன் நடித்திருக்கின்றேன். ஆனால், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதுபோல நடிகை சிம்ரனுடனும் இணைந்து நடிக்க விருப்பப்படுகிறேன்.

வடிவேலுடன் இணைந்து நடிக்க விருப்பம்: நடிகர் வடிவேலு, கருணாஸ் போன்றோருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன். நகைச்சுவை உணர்வு ஒவ்வொருவரிடம் ஒவ்வொருமாதிரியாக இருக்கும்.

அதுபோல, மற்ற நகைச்சுவை நடிகரை நான் போட்டியாகக் கருதவில்லை. என்னை வளர்த்துக் கொண்டு சிறப்பாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

நான் பல படங்களில் நடித்தாலும், வசனங்கள் பேசாமல் உடல் அசைவின் மூலமாகவே நடிக்க விரும்புகிறேன்.

மனோரமா, கோவை சரளா போன்ற நகைச்சுவை நடிகைகளுக்குப் பிறகு நகைச்சுவை நடிகைகள் உருவாகாமல் போனதற்கு, நடிக்க வருபவர்களை தங்களை இரண்டாம் நிலை கதாநாயகிகளாகக் கருதிக் கொள்வதுதான் காரணம்.

கேரள, கர்நாடக மாநிலங்களில் திருட்டு விசிடி இல்லாத நிலையில், தமிழகத்தில் திருட்டு விசிடி இருக்கிறது. மக்கள் மனநிலையும் மாற வேண்டும். திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்க வேண்டும். திருட்டு விசிடியை ஒழிக்க அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றார் சந்தானம்.