செய்திகள்

நடிகர் சங்கத்துக்கு ஜூலை 15-இல் தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் ஜூலை 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. தற்போது சரத்குமார் தலைமையிலான நிர்வாகக் குழு பதவிகளை வகித்து வருகிறது.

சங்கத்தின் பொதுச் செயலாளராக ராதாரவி பதவி வகித்து வருகிறார். விஜயகுமார், கே.என்.காளை ஆகிய இருவரும் துணைத் தலைவர்களாக பதவியில் உள்ளனர். வாகை சந்திரசேகர் பொருளாளராக உள்ளார்.

ஸ்ரீகாந்த், மனோபாலா, சார்லி உள்ளிட்ட 23 பேர் செயற்குழு உறுப்பினர்களாக பதவி வகித்து வருகின்றனர். இந்த நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய சினி மியூசிஷியன் யூனியன் வளாகத்தில் நடக்கவுள்ள இந்தத் தேர்தலுக்கு, முதன்மைத் தேர்தல் அதிகாரியாக வழக்குரைஞர் ஜெ. செல்வராசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தேர்தல் அதிகாரியாக வழக்குரைஞர் ஜேம்ஸ் அமுதன் பணியாற்றவுள்ளார்.