செய்திகள்

நடிகை ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் மரணம்

பிரபல தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் (31) உடல்நலக் குறைவால் நேற்று அமெரிக்காவில் மரணமடைந்தார்.

நடிகை ஆர்த்தி அகர்வால் பெற்றோருடன் அமெரிக்காவில் உள்ள எக் ஹார்பர் நகரில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதற்கான அறுவை சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.

‘பாகல்பம்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமான இவர், தெலுங்கில் ‘நுவ்வு நாக்கு நசாவ்’, ‘நீ ஸ்நேகம்’, ‘சங்கராந்தி’ ‘ரணம் 2’ உள்ளிட்ட படங்களிலும், தமிழில் ‘பம்பரக் கண்ணாலே’ படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த 2007 – ம் ஆண்டில் உஜ்வால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்தனர். அதன்பிறகு, நடிகை ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் உள்ள அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். ஆர்த்தி அகர்வாலின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.