செய்திகள்

நடுக்கடலில் தத்தளிப்போரை காப்பாற்ற மறுக்கும் தென்கிழக்காசிய நாடுகள்

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகளுக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுத்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் இவர்களை இந்தநாடுகள் காப்பாற்ற மறுத்தது பிழையான செயல் என யுஎன்எச்சீஆர் பேச்சாளர் விவியன் டான் தெரிவித்துள்ளார்.
அவர்களை காப்பாற்றுவதற்கான காலம் குறைவடைந்துகொண்டிருக்கின்றது, பலர் காப்பாற்றப்பட்டு கரைகளுக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 700 ற்கும் மேற்பட்ட பங்களாதேஸ் மற்றும் மியன்மார் குடியேற்றவாசிகள் மீனவர்களால் கடந்த வாரம் காப்பாற்றப்பட்டதன் பின்னணியிலேயே இந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.
குடியேற்றவாசிகளை இந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளாததால் பாரிய மனிதாபிமான நெருக்கடிகள் உருவாகலாம் என மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.
படகில் உள்ளவர்கள் குடிநீர் மற்றும் உணவு இல்லாத நிலையில் பாரிய துன்பத்தினை அனுபவித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை குடியேற்றவாசிகளின் படகுகள் மூழ்கும் நிலையிலிருந்தால் மாத்திரமே அவர்களுக்கு உதவுமாறு இந்தோனேசியா மீனவர்களை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியன்மாரிலிருந்து ரொகிங்யா முஸ்லீம்கள் துன்புறுத்தல்கள் காரணமாக வெளியேறிக்கொண்டுள்ள அதேவேளை வறுமை காரணமாக பங்களாதேஸ் மக்களும் வெளியேறிக்கொண்டுள்ளனர்.
இதேவேளை மலேசியா இவர்கள் வருவதை தடுப்பதற்காக தனதுவடமேற்கு கடற்பரப்பில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.தாய்வாந்து குடியேற்றவாசிகளின் படகுகளை திருப்பியனுப்பி வருகின்றது,