செய்திகள்

நண்பனின் நினைவாகக் குருதிக் கொடை வழங்கிய சக தோழர்கள்

யாழ்.தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் தம்முடன் கல்வி கற்ற நண்பனின் ஞாபகார்த்தமாக அவருடன் கல்வி பயின்ற சக தோழர்கள் இணைந்து குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வு அண்மையில் பன்னாலை ஸ்ரீ கணேச சனசமூக நிலையத்தில் வலி.வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் சி.ஹரிகரன் தலைமையில் நடைபெற்றது.

அமரர் கு.சிவரூபன் ஞாபகார்த்தமாக இடம்பெற்ற இந்தக் குருதிக் கொடை நிகழ்வில் குறித்த பகுதியின் கிராம சேவகர் எம்.மாலாதேவி உட்பட குறித்த மாணவனுடன் கல்வி பயின்ற 23 பேரும் நலன்விரும்பிகளும் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.இதன் போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகச் சென்று குருதியைப் பெற்றுக் கொண்டனர்.இந் நிகழ்வில் வலி.வடக்குப் பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.சஜீவனும் கலந்து கொண்டார்.

மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவனும் பொறியியலாளருமான மலேசியாவில் வசிக்கும் கணேசலிங்கம் இந்தக் குருதிக் கொடை நிகழ்விற்கு நிதி அனுசரணை வழங்கியிருந்தார்.

குறித்த நண்பர் நினைவாக விரைவில் அறக்கட்டளையொன்று ஆரம்பிக்கப்பட்டுப் பல்வேறு பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும்,குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு நான்கு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறவுள்ளதாகவும் லயன் சி.ஹரிகரன் தெரிவித்தார்.

இந்த இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாட்டை வரவேற்றுள்ள சமூக ஆர்வலர்கள் சமூகத்திலுள்ள ஏனையவர்களும் இதனைப் பின்பற்ற வேண்டுமெனத் தெரிவித்துள்ளனர்.

image (4) image (7)