நம்பிக்கையில்லா பிரேரணையால் புதிய நெருக்கடி: பாராளுமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படும்?
சட்டம் ஒழுங்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று முற்பகல் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நீக்கும் சந்தர்ப்பத்தை நாடு இழந்து போகும். அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான யோசனையில் 114 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அப்படிவம் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்களை இதனால், நிறைவேற்ற முடியாது போகும் என்றார். அத்துடன் நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்த விவாதத்தை நடத்தி உடனடியாக திகதியை ஒதுக்குமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு 113 ஆசனங்கள் அவசியம். ஆனால், 114 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால் அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றது. இதனால் அடுத்த வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.