செய்திகள்

நர்மதா நதி அணையின் உயரத்தை அதிகரித்தால் பாரிய அனர்த்தம் என்று எச்சரிக்கை

குஜராத் மாநிலம், நர்மதா நதியில் எழுப்பப்பட்ட சர்தார் சரோவர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால், நேபாளத்தில் ஏற்பட்டதைவிட பெரிய பூகம்பம் ஏற்பட வழிவகுக்கும் என்று மத்திய உண்மை அறியும் குழு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

டெல்லி பொதுவிருப்ப ஒற்றுமை குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட 6 உறுப்பினர்கள் கொண்ட மத்திய உண்மை அறியும் குழுவில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் முறையே இருவரும், சிலபல தனிநபர் நிபுணர்களும் மே மாதம் 9 மற்றும் 10-ம் தேதி சர்தார் சரவோர் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட நர்மதா பகுதி கிராமங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

சனிக்கிழமையான இன்று இந்தக் குழு தனது “பள்ளத்தாக்கை மூழ்கடித்தல்: ஒரு நாகரீகத்தை அழித்தல்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“அணையின் தற்போதைய 122 மீட்டர் உயரத்திலும் கூட, பல குடும்பங்கள் மூழ்கும் அபாயப் பகுதியில் இருப்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை எங்கள் குழு கண்டறிந்துள்ளது. இந்நிலையில் அணைக்கட்டின் உயரத்தை மேலும் 17 மீட்டர்கள் அதிகரிப்பது என்பது மேலும் ஆயிரக்கணக்கானோரை மேலும் கடுமையாக பாதிப்பதோடு, மூழ்கும் அபாயமும் உள்ளது.” என்று சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் நிபுணர் சவுமியா தத்தா தெரிவித்துள்ளார். இவர் 6 நபர் குழுவில் இடம்பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்தான் “அணைக்கட்டின் உயரத்தை மேலும் அதிகரித்தால் நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பூகம்பத்தை விட பெரிய நாசம் விளையும்” என்று எச்சரித்துள்ளார்.

“இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும், ஆகவே அரசு உப்பங்கழி குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்வது கட்டாயமாகும்” என்று அவர் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசு ஆகியவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் நிறைவடைந்து விட்டன என்றும் இதனால் அணைக்கட்டின் உயரத்தை மேலும் 17 மீட்டர்கள் உயர்த்த அனுமதி கோரி உச்ச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். ( த ஹிந்து தமிழ் )