செய்திகள்

நல்லிணக்கத்துக்காக துரோகங்களை மறக்க தயார் என்கிறார் வினோ எம்.பி

எமது பிரதேசத்தில் நல்லிணக்கம் பெயரளவிலேயே உள்ளதா என்ற சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், நல்லிணக்கம் ஏற்படுவதற்காக கடந்த அரசின் துரோகத்தனங்களை மறக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா பூவரசன்குளம் மகாவித்தியாலயத்தில் நேற்று தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தேசிய அரசாங்கம் அமைந்துள்ள காரணத்தால் நாங்கள் தேசிய அரசாங்தக்தில் நேரடியாக ஆதரவு வழங்கா விட்டாலும் கூட தேசிய அரசாங்கத்தில் உள்ளவர்களோடு இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம்.
அதனாலேயே ஒரே மேடையில் நாங்கள் அமர்கின்றோம். இவ்வாறான நிலை தொடரவேண்டும் என்ற விருப்பம் தமிழ் மக்களிடம் இருக்கின்றது.

ஆகவே கடந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தனமான செயற்பாடுகளை நாம் மறப்பதற்கு தயாராக இருக்கின்றோம். ஆகவே தற்போதுள்ள நிலை தொடரவேண்டும் . அதனூடாகவே நாம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்.

ஆனால் எமது பிரதேசத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கின்றபோது நல்லிணக்கம் என்பது பெயரளவில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகின்றது. ஆகவே அதை நாம் மாற்றி அமைக்கவேண்டும்.

கடந்த அரசாங்கத்தில் இருந்த நிலை மெல்லமெல்ல மாறி வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தீர்வில் நாங்கள் ஏமாந்துவிடுவோமோ என்ற அவநம்பிக்கை கூட எங்களுக்கு உள்ளது. எனவே இந்த அவநம்பிக்கையை அகற்றுவதற்கு தேசிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊன்றுகோலாக இருக்கவேண்டும். அதற்காக நீங்கள் பாடுபடவேண்டும். அதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினராகிய நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

அத்துடன் எங்களுடைய மக்களின் முழுமையான ஆதரவு கிடைத்ததன் காரணமாக உங்களுடைய கொள்கைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் மக்களும் ஏற்றுக்கொண்டதன் காரணமாக இன்று நீங்கள் அமைச்சராக வந்துள்ளீர்கள். அந்தவகையில் நாங்கள் பெருமையடைகின்றோம்.

இந்த வன்னி மாவட்டம் கடந்த கால யுத்தம் காரணமாக கீழ் நிலையில் உள்ளது. மலையகத்தில் எவ்வாறு கல்வி மட்டம் உள்ளது. தற்போது அது விருத்தி அடைந்து வருவது உங்களுக்கு தெரியும். அதேபோல் வன்னியின் கல்வி தரத்தையும் முன்னோக்கி கொண்டு வரவேண்டிய தார்மீக பொறுப்பு உங்களிடம் உள்ளது என தெரிவித்தார்.