செய்திகள்

நவீன வசதி கொண்ட 65,000 வீட்டுத் திட்டத்தில் சர்ச்சைகள் தீர்க்கப்பட வேண்டும்! வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம்

நேர்காணல்

-கே.வாசு-

யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்ட போதும் வடக்கில் இன்றும் அவலநிலை தொடர்கிறது. மீள்குடியேற்றம், பொருளாதாரம், வீட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு என தினமும் பலர் அலைந்து திரிவதையும், காணாமல் போனோர், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை என தினமும் போராடுவதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது. இன்னும் சில குடும்பங்கள் ஒரு நேர வயிற்றுப் பசியைப் போக்கி வாழ்வதற்காக போராடுவதையும் பார்க்கின்றோம். முன்னைய அரசாங்கத்தால் தான் நன்மை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் திகதி இந்த நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னராவது விடிவு கிடைக்கும் என வடக்கு மக்கள் நம்பியிருந்த நிலையில் அவை இன்று கானல் நீராகியுள்ளதையே பல சம்பவங்கள் கோடிட்டு காட்டி நிற்கின்றன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்காக 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பத்தாயிரம் வீடுகளையும், நவீன முறையிலான 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான 65,000 புதிய வீட்டுதிட்டங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ் வீட்டுத் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை காணப்படுகின்றது. இதன்காரணமாக வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் தற்போதைய மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட நிலமைகள் தொடர்பாக வழங்கிய விசேட பேட்டியே இது…

கேள்வி: யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் பலர் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலை தொடர்கிறது. தற்போது வடக்கின் மீள்குடியேற்றம் எவ்வாறு உள்ளது?

பதில்: அண்மையில் வடக்கு மாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியிருந்தோம். வடக்கின் 5 மாவட்டங்களிலும் அரச அதிபருடன் இணைந்து அது தொடர்பான தகவல்களை பெற்றிருந்தோம். அந்த வகையில் வடக்கில் இதுவரை ஒரு இலட்சத்து ஐம்பத்து எட்டாயிரத்து 181 குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து இலட்சத்து இருபத்து நான்காயிரத்து 944 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் யாழ்ப்பாணத்தில் முப்பத்தொராயிரத்து 845 குடும்பம், மன்னாரில் இருபத்தாறாயிரத்து 390 குடும்பம், வவுனியாவில் பதினாறாயிரத்து 862 குடும்பம், கிளிநொச்சியில் நாற்பத்தொராயிரத்து 862 குடும்பம், முல்லைத்தீவில் நாற்பத்தொராயிரத்து 322 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இவை அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையானது. இவை தவிர மீள்குடியேற்றப்படவுள்ளவர்களும் தற்போது இருக்கின்றார்கள். அதில் இலங்கையில் தற்போது முகாம்களில் ஆயிரத்து 608 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 732 பேர் வாழ்கின்றார்கள். அதில் யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 318 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 737பேர், வவுனியா மாவட்டத்தில் 290 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேர் வாழ்வதாகவும் தகவல்கள் இருக்கிறது. அதேமாதிரி தான் உறவினர்கள், நண்பர்களுடன் வாழும் குடும்பங்களும் கணிசமான எண்ணைகையில் இருக்கிறார்கள். மொத்தமாக பதினொராயிரத்து 73 குடும்பங்களைச் சேர்ந்த முப்பத்தெட்டாயிரத்து 283 பேர் இவ்வாறு இருக்கின்றார்கள். ஆகவே, மீள்குடியேற்றப்பட வேண்டிய பன்னிராயிரத்து 681 குடும்பங்களைச் சேர்ந்த நாற்பத்து நான்காயிரத்து 15 பேர் இன்னும் மீள்குடியேற்றப்பட இருக்கிறார்கள். இதில் மீள்குடியேற்றம் என்று சொல்லுகின்ற போது உட்கட்டுமான வசதி, அடிப்படை சுகாதார சேவை, கல்வி, அவர்களுக்கான வேலைவாய்ப்பு, உள்ளூர் வீதிகள், பாதுகாப்பு என பல அடிப்படை தேவைகள் இருக்கின்றது. 7 வருடம் சென்ற நிலையிலும் இன்று பலர் தமது கிராமங்களுக்கு சென்றிருந்தாலும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலேயே வாழ்கின்றனர்.

கேள்வி: புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் வடக்கில் இடம்பெயர்ந்தோர் முகாம்கள் உள்ளன. இது தொடர்பில் ஏதாவது நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றதா?

பதில்: ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சில முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது என்று தான் நாம் கருதவேண்டும். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அந்த வேகம் இந்த ஆட்சி மாற்றம் வந்த பின்னர் இல்லை என்பது மிகவும் கசப்பான உண்மை. இந்த ஆட்சி மாற்றம் வந்த பிறகு குறிப்பாக யாழ்ப்பாணம் வலிவடக்கில் கணிசமாக காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறையக் காணி விடுவிக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. போன வாரம் கூட கோப்பாய், தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 702 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. அந்த விடுவிப்பின் போது ஜனாதிபதி அவர்கள் தான் உறுதியளித்த படி காணிகளை விடுவிப்பதாகவும் இன்னும் 3 மாத காலப்பகுதிக்குள் அவை விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதனால் அதற்குரிய நடவடிக்கையை அவர் எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இந்த அகதி முகாம்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கிறது. உயர் பாதுகாப்பு வலயம் என்று இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் வாழ வேண்டிய மக்களே முகாம்களில் வாழ்கின்றார்கள். அதனால் இந்த அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயம் என வைத்திருக்கும் காணிகளை விடுவித்தால் இந்த முகாம்கள் இல்லாமல் போய்விடும் என்பதே உண்மையான நிலைப்பாடு.

கேள்வி: புதிதாக தற்போது வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் தெரிவு புள்ளியிடலில் கூட யுத்தால் பாதிப்படைந்த சிலர் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன் உண்மை நிலை என்ன?

பதில்: கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தியன் வீட்டுத் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றதனையும், வீடுகள் உள்ளவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதனையும், சிலருக்கு இரண்டு வீடுகள் இருந்ததினையும் நாங்களும் பார்த்திருக்கின்றோம். அவ்வாறு வழங்கப்பட்ட வீடுகளில் பல வீடுகள் எவரும் குடியமராத நிலையில் பூட்டப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் எந்தவொரு வீடும் இல்லாத நிறைய பேர் வேறு இடங்களில் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் புதிய அரசாங்கத்தினுடைய மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ள வீட்டுத் திட்டத்திற்குரிய புள்ளி முன்னைய இந்திய அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திற்கான புள்ளி அடிப்படையில் பார்கின்ற போது ஒரு முன்னேற்றகரமானது என நான் தனிப்பட்ட ரீதியில் பார்க்கின்றேன். ஏனென்றால் இந்த வீட்டுத்திட்டத்தில் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் அவர்களது படிப்படையான பிள்ளைகளது தலைமுறைக் குடும்பங்கள் தொடர்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். இந்திய வீட்டுத்திட்டத்தில் வீட்டு அங்கத்தவர் எண்ணிக்கை, வயது என்ற பல விடயங்கள் பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய முறையில் வீட்டில் ஒருவர் இருந்தால் கூட வீட்டை பெற முடியும். அதேமாதிரி குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை, பொருளாதார நிலமை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், பெற்றோர் இல்லாத குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்கள், காணாமல் போனவர்களது குடும்பங்கள், போரில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், புனர்வாழ்வு பெற்றவர்கள் என அவர்களுக்கும் தனித்துவமான புள்ளிகள் வழங்கப்படுகிறது. ஆகையால் எமது சமூகத்தில் அதி கூடிய கவனம் தேவைப்படுகின்ற குடும்பங்களுக்கு ஓரளவேனும் இதன் மூலம் வீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்பது ஒரு சந்தோசமான விடயம்.

கேள்வி: வடக்கில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியவர்களாக எவ்வளவு பேர் அளவில் இருக்கின்றார்கள்?

பதில்: வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட விசேட தேவைக்குட்பட்டோர், நாற்பத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைக் குடும்பங்கள், தாய்- தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள், பிள்ளைகள் அனைவரையும் இழந்த பெற்றோர், புனர்வாழ்வு பெற்ற பதினைந்தாயிரம் முன்னாள் போராளிகள், ஏனையவர்களில் கவனிப்பு தேவையான பல முதியோர்கள் இருக்கின்றார்கள். இப்படியாக நாம் பார்த்தால் எமது மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்ட மக்கள் அதிக கவனம் தேவைப்படும் மக்களாகத் தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த வீட்டுத்திட்ட முறையில் ஓரளவேனும் தீர்வு கிடைக்கும் என நம்புக்கின்றேன்.

கேள்வி: 65,000 வீட்டுத் திட்டத்தின் கீழான புதிய வீட்டுத்திட்ட விண்ணப்பங்களை கிராம சேவகர், பிரதேச செயலக உறுப்படுத்தலுடன் மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்புமாறு பத்திரிகைகளில் விளம்பரங்கள் வருகின்றது. இந்நிலையில் அமைச்சு நேரடியாக பரிசீலிப்பதால் அரசியல் தலையீடுகள் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறதே?

பதில்: நான் அப்படி நடக்கும் என நம்பவில்லை. நீங்கள் கூறியபடி கிராம அலுவலர் உறுதிப்படுத்தி பிரதேச செயலகம் ஊடாக மீள்குடியேற்ற அமைச்சுக்கு அனுப்ப வேண்டும் என்ற நடமுறை தான் தற்போது உள்ளது. இதில் அரசியல் தலையீடு இருக்கும் என்றால், மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த மாகாண சபையின் பங்கு என்ன?, முன்னைய ஆட்சியைப் போன்று இந்த ஆட்சியிலும் தமது மக்களது தேவைகள், உரிமைகள் தொடர்பாக பேசாது பார்வையாளராகத் தான் மகாகாண சபை இருக்க வேண்டும் என இந்த அரசு விரும்புகின்றதா என்ற ஒரு கேள்வி எழுகின்றது. இதனால் தான் நாம் மத்திய மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ சுவாமிநாதன் அவர்களிடம் போய் மீள்குடியேற்றம் தொடர்பில் பேசியிருந்தேன். அவர்கள் சில வேலைத்திட்டங்களை மாகாண சபையுடன் இணைந்து செய்வதற்கு கொள்கை ரீதியாக உடன்பட்டுள்ளதுடன், அதற்காக சில கட்டமைப்புக்களை உருவாக்கி நீதியான முறையில் வீட்டுத்திட்டத்தை வழங்க வேண்டும் என கரிசனை கொண்டுள்ளார். அதில் நாம் ஒரு இணக்கத்திற்கு வந்திருந்தோம். 5 மாவட்டத்திலும் வீட்டுத்திட்டம் தொடர்பாக ஒரு குழுவை அமைப்பது என்றும் அதில் மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பிரதிநிதிகள், மத்திய மீள்குடியேற்ற அமைச்சின் பிரதிநிதிகள், மாவட்ட அரச அதிபரின் பிரதிநிதிகள் ஆகிய மூன்று பிரதிநிதிகளும் சேர்ந்து இந்த பயனாளிகள் தொடபில் பரிசீலிப்பதாகவும், இந்த வீட்டுத்திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக யாராவது கருதினால் இந்தக் குழுவிடம் முறையிட கால அவகாசமும் வழங்கப்படவுள்ளது. அந்த விசாரணைகள் முடிந்த பின்னரே இந்த வீட்டுதிட்டம் வழங்கப்படவுள்ளது.

இது வெகுவிரைவில் நடைமுறைக்கு வரும். அப்படி நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்தும் இருக்கின்றோம். ஏனென்றால் இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லுகின்ற இந்த அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு இந்த வடக்கு மாகாண மக்கள் தமது பூரண பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். இந்த அரசாங்கத்தில் அவர்கள் தற்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கை வீண் போகாமல் இருக்க வேண்டுமானால் வடக்கில் இடம்பெறும் அனைத்து திட்டங்களும் மக்கள் நலனை முன்னுறுத்தி மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கம் என்ற வேறுபாடு இல்லாது இருபகுதியும் சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் திட்டங்கள் தான் வெற்றி பெறும். அந்த அடிப்படையில் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கையில் மத்திய அரசாங்கம் முன்னுதாரமாக நடக்கும் என நம்புவதுடன், அவ்வாறு நடந்தால் எந்த பிரச்சனையும் வராது என கருதுகின்றேன்.

கேள்வி: வடமாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் 5 மாவட்டங்களையும் உள்ளடக்கி தமது புனர்வாழ்வு அமைச்சினால் கொள்கை வகுக்கப்படுவதாக செய்திகள் வந்தன. அந்த வடமாகாண கொள்கையுடன் ஒத்துப் போகும் வகையிலா தற்போதைய வீட்டுத் திட்டம் வழங்கப்படுகின்றது?

பதில்: நாங்கள் வடமாகாணத்திற்கான மீள்குடியேற்ற கொள்கை ஒன்றை தற்போது தான் தயாரித்து வருகின்றோம். அது இன்னும் வெளியிடப்படவில்லை. ஏனெனில் அது சாதாரணமாக இரண்டு பேர் இருந்து எழுதும் கொள்கையாக இருக்கக்கூடாது. அதில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். உண்மையான கருத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இந்த துறைசார் குழு ஒன்றை உருவாக்கி அதனை செய்து வருகின்றோம். அதேநேரம் மத்திய அரசாங்கமும் இந்த நாட்டிற்குரிய மீள்குடியேற்ற கொள்கை ஒன்றை தயாரிக்கிறது. அவர்களுடைய கொள்கையும் வெளியிடப்படவில்லை. அந்த கொள்கையின் முன்வரைவு எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த கொள்கை தொடர்பில் இந்த மாத இறுதியில் கொழும்பில் உயர்மட்ட கூட்டம் நடைபெறவுள்ளது. நாங்கள் அந்த உயர்மட்ட கூட்டத்தில் மத்திய அரசின் அந்த மீள்குடியேற்ற கொள்கையில் உள்ள சாதக பாதகங்களை வடமாகாண சபை என்ற அடிப்படையில் சொல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்போது எமது கரிசனையை நாங்கள் சொல்லுவோம். அதேமாதிரியாக வடமாகாணத்திற்கான மீள்குடியேற்ற கொள்கையையும் சமர்ப்பிக்க இருக்கிறோம். இரு மீள்குடியேற்ற கொள்கையும் இன்னும் வெளியாகவில்லை. அதற்குள் இந்த வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அந்த கொள்கை வந்த பின்னர் சிறந்ததொரு மீள்குடியேற்றத்தை அல்லது நியாயமான மீள்குடியேற்றத்தை வழங்க முடியும்.

கேள்வி: தற்போது வடக்கில் அமைக்கப்படவுள்ள 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் எமது காலநிலைக்கு பொருத்தமானதில்லை என வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். சம்மந்தப்பட்ட வடக்கின் அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நான் அந்த வீட்டைச் சென்று பார்த்தேன். அதில் பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருப்பது இயற்கையானக விடயம். இதுவரையில் வடக்கிலோ, கிழக்கிலோ இவ்வாறான வீடு வழங்கப்படவில்லை. இதனால் பல சந்தேகங்கள் எல்லா மட்டத்திலும் இருக்கிறது. பிரயோசனமற்றது, இயற்கைக்குப் பொருத்தமானதா?, எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்ற மாதிரியான கருத்துக்கள் இருக்கின்றன. வடமாகாண முதலமைச்சர் அவர்கள் இது தொடர்பில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதேபோல் அன்று நடந்த கூட்டத்தில் கௌரவ மீள்குடியேற்ற அமைச்சர் அவர்களும் இந்த வீடு தொடர்பான தன்னுடைய கருத்துக்களை அங்கு தெரிவித்திருந்தார். ஆனால் எங்களுடைய ஜனாதிபதி சொன்ன விடயத்தையே நானும் சொல்கின்றேன். என்னவென்றால் அமைச்சர்களோ, அதிகாரிகளோ அந்த வீட்டில் வாழப்போவதில்லை. அந்த வீட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மீள்குடியேறும் மக்களே வாழப் போகிறார்கள். மக்கள் அந்த வீடு தமக்கு பொருத்தமானதா, இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும். மக்களுடைய கருத்தை அரசாங்கம் கட்டாயம் அறிய வேண்டும். அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பொதுவாக இந்த வீடு பொருத்தமானதா என்ற சந்தேகம் இருக்கின்றது. இந்த வீட்டை பின்னர் பெருபிக்க முடியாத நிலை வரும் என்று கூட மக்கள் என்னிடம் சொன்னார்கள். எவ்வளவு காலம் இருக்கும் என குழப்பம் இருக்கிறது. இதனால் இந்த சந்தேகங்களை மத்திய மீள்குடியேற்ற அமைச்சு தீர்க்க வேண்டும். அவர்கள் இது தொடர்பான அறிவைக் கொண்டிருப்பார்கள் என கருதுகிறேன். ஆகவே ஜனாதிபதி கூறுவது போன்று மக்கள் வாழும் வீடுகள் அவை. அது தொடர்பில் அவர்களே தீர்மானிக்கட்டும்.

கேள்வி: இந்த வீடு தொடர்பில் வடமாகாண சபை அல்லது வடமாகாண புனர்வாழ்வு அமைச்சு மக்களிடம் ஏதாவது கருத்துக்களைப் பெற்றுள்ளதா?

பதில்: பெறுவதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது. இப்போது அந்த வீடு தொடர்பில் சில கருத்துக்களைப் பெறுவதற்குரிய சில முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எங்களுடைய கௌரவ முதலமைச்சர் அவர்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி மக்கள் கருத்தறியும் நடவடிக்கையை மேற்கொள்வோம். ஏற்கனவே பரீட்சார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள அந்த வீடுகள் அமைந்துள்ள பகுதிக்குரிய பிரதேச செயலாளர் ஊடாக அவ்வாறு அமைக்கப்பட்ட இரு வீடுகளிலும் கருத்துக்களை பெறுவதற்கான குறிப்புக்களை வைத்துள்ளார்கள். அந்த வீடுகளை பார்த்த பின்னர் மக்கள் அதில் தமது கருத்துக்களை குறிப்பிட முடியும். ஆகவே, பொதுமக்கள் கட்டாயம் அங்கு வந்து தமது கருத்துக்களை சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் அங்கு வாழப்போகிறவர்கள். அதேபோல் நாங்களும் எமது வடமாகாண கொளரவ உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று அதனை மத்திய அரசுக்கு வழங்குவோம்.

கேள்வி: இதேவேளை, ஒரு வீட்டுக்கு 21 இலட்சம் ரூபாய் செலவு செய்வதை கூட முதலமைச்சர் எதிர்த்துள்ளார். இது பற்றிய உங்களது பார்வை என்ன?

பதில்: முதலமைச்சர் சொன்ன கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து. ஏனென்றால் ஒருவருக்கு 21 இலட்சம் பெறுமதியான வீடு கிடைத்தால் சந்தோசம். அது வசதி கூடிய வீடாக இருக்கும். அந்த 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டை அரசாங்கம் வடக்கு, கிழக்கு பகுதியில் யுத்தத்தால் பாதிப்படைந்து மீள்குடியேறுகின்ற மக்கள் எல்லோருக்கும் வழங்கும் என்றால் எந்த எதிர்ப்பும் இல்லை. 40 இலட்சத்தில் கட்டிக் கொடுத்தால் கூட சந்தோசம் தான். என்னைப் பொறுத்தவரை நான் யோசிப்பது, முதல் 5 இலட்சம் வீடு கொடுத்ததால் எல்லோருக்கும் அதுதான் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு இல்லை. எங்களுடைய மக்களுக்கு ஒரு பகுதி வழங்கப்பட்டு முடிந்து விட்டது. புதிய அரசாங்கம் இனி தரப்போகும் வீடுகளை நல்ல வசதியான வீடுகளை வழங்குவதற்கு தயராக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள தயார். அதனால் முதல் கொடுத்த தொகைக்கே வீட்டுத்திட்டத்தை வழங்க வேண்டும் என்பது எனது கருத்து இல்லை. நல்ல வீடு கொடுத்தல் சந்தோசம். ஆனால் கேள்வி என்னவென்றால் இந்த 21 இலட்சம் பெறுமதியான 65,000 வீடுகள் தானா அல்லது மீள் குடியேறிய அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படுமா? என்பதே. அனைவருக்கும் வழங்கப்படும் என்றால் 21 இலட்சம் பெறுமதியான வீடு வழங்குவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் மீள்குடியேறிய எல்லோருக்கும் வீடுகள் வழங்கப்படாது இவ்வளவு பெறுமதியில் தான் மொத்தமாக வீடுகள் வழங்க முடியும் என்றால் அந்த 21 இலட்சத்தை பிரித்து இரண்டு பேருக்கோ அல்லது மூன்று பேருக்கோ வீட்டுத்திட்டத்தை வழங்க முடியும். இதன் மூலம் மீள்குடியேறிய பலர் வீட்டுத் திட்டத்தை பெற வாய்ப்ப்புக்கள் கிடைக்கும். மீள்குடியேறிய அனைவருக்கும் வீட்டுத்திட்டம் கிடைக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

N5