நவுறு தீவிலிருந்து முதல் தொகுதி புகலிடக்கோரிக்கையாளர்கள் கம்போடியா வருகை
நவுறு தீவிலுள்ள அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முதல் தொகுதி புகலிடக்கோரிக்கையாளர்கள் கம்போடிய தலைநகர் புனொம் பென்னை வியாழக்கிழமை சென்றடைந்துள்ளனர். சர்ச்சைக்குரிய மேற்படி திட்டத்திற்கு தாமாக முன்வந்து இணக்கம் தெரிவித்திருந்த ஈரானைச் சேர்ந்த மூவர் மற்றும் மியன்மார் ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட நால்வர் இந்த முதல் தொகுதி புகலிடக்கோரிக்கையாளர்களில் உள்ளடங்குகின்றனர்.
கம்போடியாவானது கடந்த வருடம் அவுஸ்திரேலியாவிடமிருந்து 40 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவியைப் பெறுவதற்குப் பதிலாக புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தது. அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையானது அகதிகளை ஏற்றுக் கொள்வது தொடர்பான அதன் சர்வதேச கடப்பாட்டை மீறும் செயலாக உள்ளதாக மனித உரிமைகள் குழுக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
புகலிடக்கோரிக்கையாளர்கள் தனது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்காதுள்ள அவுஸ்திரேலியா, அவர்களை நவுறு மற்றும் பபுவா நியூகினியிலுள்ள மனுஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. நவுறு தீவில் மட்டும் சுமார் 677 புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நவுறு தீவிலிருந்து வர்த்தக விமானமொன்றில் கம்போடியாவுக்கு அழைத்துவரப்பட்ட நான்கு அகதிகளும் புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பின் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். தமது அந்தரங்கத்தை பாதுகாக்கக் கோரியுள்ள அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க மறுத்துள்ளனர்.
அவர்கள் புனொம் பென்னில் தற்காலிகமாக தங்க வைக்கப்படவுள்ளனர். அவர்களுக்கு மொழிப் பயிற்சி, கலாசார மற்றும் சமூக தகவல்கள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் , .வேலைவாய்ப்பு சேவைகள் என்பன உள்ளடங்கலான அத்தியாவசியமானவற்றை புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு வழங்கவுள்ளதாக அந்த அமைப்பு தன்னால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்திரேலியா உடன்படிக்கையின் ஓர் அங்கமாக புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பிற்கு நிதியளிக்கவுள்ளது.
கம்போடியாவுக்கு தனது சமூகத்துடன் அகதிகளை நிரந்தரமாக இணைப்பதற்கான இயலுமை கிடையாது என்பது தெளிவானது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த பில் ரொபேர்ட்ஸன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். .அதேசமயம் ஐக்கிய நாடுகள் அகதி கள் முகவர் நிலையமும் மேற்படி நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.