செய்திகள்

நாகப்பட்டினத்தில் பெண் நீதிபதி லதா மீது தாக்குதல்

வேதாரண்யம் அருகே பெண் நீதிபதி லதா மீது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 40 வயது நிரம்பிய வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி லதா, நாகப்பட்டிணம் நீதிமன்ற நீதிபதி விடுமுறை என்பதால் கடந்த ஒரு வாரமாக காலை, மாலை என இரு இடங்களிலும் தனது பணியை கவனித்து வந்துள்ளார். புதன்கிழமையன்று மாலை நீதிமன்ற பணிகளை முடித்துவிட்டு, நாகப்பட்டிணத்தில் இருந்து வேதாரண்யத்தில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

வேதாரண்யம் அருகே பூவத்தடியில் லதாவின் காரை வழிமறித்த அடையாளம் தெரியாத ஒரு கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை தடுக்க வந்த நீதிபதியின் கார் சாரதியையும் அந்த கும்பல் தாக்கியதுடன்,  நீதிபதியின் காரில் இருந்த சாவியையும் எடுத்துக்கொண்டு தப்பியுள்ளது. தாக்குதலில் தலையில் காயமடைந்த நீதிபதி லதா மற்றும் கார் ஓட்டுநர் சதீஷ் ஆகியோர் வேளாங்கண்ணியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நீதிபதி லதாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்தால் 6 தையல் போடப்பட்டுள்ளது. டிரைவருக்கு கையில் அடிபட்டுள்ளது.

இந்த தாக்குதல் குறித்து அறிந்த காவல்துறை எஸ்.பி. அபினவ் குமார், நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 6 நீதிபதிகள் மருத்துவமனைக்கு வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.  இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார்இ தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகிறது. காவல்துறை எஸ்.பி. அபினவ் குமார்இ நீதிபதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.