செய்திகள்

நாகப்பட்டினத்தில் வழக்கறிஞர்கள் இன்று முதல் போராட்டம்

நாகப்பட்டினத்தில், காரில் சென்ற பெண் நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நீதித்துறை நடுவர் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் லதா. இவர் வேதாரண்யம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, பிரதாப ராமபுரம் என்ற இடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் கார் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் நீதிபதி லதாவையும் அவர்கள் கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த நீதிபதி லதா, வேளாங்கன்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிபதி லதா தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக, நாகப்பட்டினம் வழக்கறிஞர்கள் சங்கமும், வேதாரண்யம் வழக்கறிஞர்கள் சங்கமும் தெரிவித்துள்ளன.