செய்திகள்

நாசீவன்தீவில் தோணி கவிழ்ந்தது: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை ஆற்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தோணியொன்று கவிழ்ந்ததினால், அத்தோணியில் பயணித்த ஒரு வயதுச் சிறுவன் உட்பட 10 பேர் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு தேவைகள் கருதி நாசீவன்தீவு கிராமத்திலிருந்து வாழைச்சேனை நகருக்கு இவர்கள் தோணியில் பயணித்துள்ளனர்.

இதன்போது மேற்படி தோணி திடீரென்று கவிழ்ந்த நிலையில் ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இவர்களின் கூச்சல் கேட்டு, வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் நின்ற மீனவர்கள் தங்களது படகுகளில் சென்று ஆற்றில் மூழ்கியவர்களை காப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

காப்பாற்றப்பட்டுள்ளவர்களில் இரண்டு பெண்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விசாரணைகளின்; பின்னர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தங்களது பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆவணங்கள் ஆற்று நீரில் மூழ்கியுள்ளதாக காப்பாற்றப்பட்ட பயணிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.