செய்திகள்

நாடகங்களை ஒளிபரப்ப கப்பம் கொடுக்க வேண்டியிருந்தது: மாலனி பொன்சேகா

தொலைக்காட்சியில்  நாடகங்களை ஒளிபரப்புவதற்காக கப்பம் கொடுக்க வேண்டுமென்ற காரணத்தினால் கடந்த காலங்களில் தான் தொலைக்காட்சி நாடகங்களை தயாரிப்பதிலிருந்து ஒதுங்கியிருந்ததாக பிரபல சிங்கள சினிமா நடிகையான பாராளுமன்ற உறுப்பினர் மாலனி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அப்போது அவ்வாறு கப்பம் பெற்ற குழுக்களில் சிலர்  இன்னும் தொலைக்காட்சிகளில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் இவர்கள் கப்பத்தை பெற்றுக்கொண்டு தரமற்ற நாடகங்களையும் ஒளிபரப்பினர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பு பணிகளிலிருந்து ஒதுங்கியிருந்தேன். என அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புவதற்காக அதிகாரிகள் நடிகைகளிடம் பாலியல் லஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பாக பொலிஸாருக்கு தற்போது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பிரபல நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.