செய்திகள்

நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை: மேற்கு நாடுகளின் தூதுவர்களிடம் மைத்திரி

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் நாளை 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாடுகளின் தூதுவர்களை ஜனாதிபதி இன்று சந்தித்துப் பேசினார்.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால விளக்கியதாகவும், அதற்கு தூதுவர்கள் தமது முழமையான ஆதரவைத் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியலமைப்புக்கான முக்கிய மாற்றங்களுக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதும், அதன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதும்தான் தன்னுடைய நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால தூதுவர்களுக்கு விளக்கினார்.