செய்திகள்

நாடளாவிய மின் துண்டிப்பு ஏன் ஏற்பட்டது? சபை அதிகாரிகள் விசாரணைக்கு அழைப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சார விநியோகத் துண்டிப்புத் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக இலங்கை மின்சாரசபையின் அதிகாரிகள் எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவான ‘கோப்’ குழு இதற்கான அழைப்பை விடுத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி (ஜே.வி.பி எம்.பி) தெரிவித்தார்.

கடந்த ஆறு மாத காலத்தில் மூன்று தடவைகள் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் எதிர்வரும் 24ஆம் திகதி கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 13ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சாரத் தடையின் பின்னரான நிலைமைகள் குறித்து அவர்களிடம் தாம் விளக்கம் கோரவிருப்பதுடன், தடைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதா? மின்சாரத் தடையினால் ஏற்பட்ட சேதம் என்பன குறித்து அவர்களிடம் கேட்டறியவிருப்பதுடன், எதிர்காலத்தில் அவ்வாறான தடைகள் ஏற்படாதிருக்க மேற்கொண்டுள்ள திட்டங்கள் எவை என்பது குறித்தும் வினவ இருப்பதாக சுனில் ஹந்துன்நெத்தி கூறினார்.

மின்சாரத் துண்டிப்புத் தொடர்பில் கோப் குழு இதுவரை எந்தத் தரப்பினரிடமிருந்தும் தகவல்களைப் பெறவில்லை. எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தும் விசாரணைகளிலிருந்து முழுமையான தகவல்களைப் பெற எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புக்களுக்குப் பொறுப்பேற்று மின்சார சபையின் தலைவர் தனது பதவியை இராஜினாமாச் செய்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது. அவர் ஏற்கனவே மின்சார சபையின் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்தாலும் தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களில் பொறுப்பு வாய்ந்த பதவியில் இன்னும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தனியார் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அரசாங்கத்துக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிக்கும் ‘மின்சார மாபியா’ கும்பலொன்றும் செயற்பட்டு வருகிறது. இவைகுறித்தும் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பது தொடர்பில் மின்சாரசபையின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவிருப்பதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.
R-06