செய்திகள்

நாதன் நடம்

மருத்துவர். சி. யமுனாநந்தா

எண்ணிறைந்த உயிர்களுக்கும் அவ்வவற்றிற்கு ஏற்ற உடம்பைக் கொடுத்து உலகில் இயங்கச் செய்தலே படைத்தல் ஆகும். மாயையில் இருந்து உலகம் தோன்றுகின்றது. ஆன்மாக்கள் பிறந்து இறப்பதற்கு காரணமானது ஆஞ்ஞாசக்தியாகும். இது கன்மபலன் ஆகும். கன்மசேசச்தினால் சூக்கும தேக மாத்திரையே கொண்டு மனஞ்செலுத்தி மானிடம் முதல் விலங்குகளின் பிறவி கருவிலேபடும்.

நடராஜப் பெருமானின் திருநடனத்தில் இறைவனின் ஐந்தொழில்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. தமரகத்தை அசைத்து நாதத்தை உண்டாக்கும் கை உலகத்தைத் தோற்றுவித்தலைக் குறிக்கும். இங்கு உலகம் எனும்போது சொல்லுலுகம், பொருளுலகம் எனும் இரு வகையது.

கூத்தப் பெருமானின் அபயம் தரும் கை காத்தலைக் குறிக்கின்றது. பிறப்பு இறப்புக்களில் அகப்பட்டு சுழன்று பெரிதும் இழப்பினை அடைந்த உயிர்களின் இழப்பினை நீக்குவதற்கு உடம்பில் இருந்து உயிர்களைப் பிரித்து சிறிது ஓய்வுகொள்ளும்படி இறைவன் செய்யும் தொழிலே அழித்தல் ஆகும். சிவநடனத்தின் தீயேந்தியகை அழித்தலைக் குறிக்கின்றது.

இறைவன் உயிர்களுக்குத் தன்னைக் காட்டாது உலகத்தையே காட்டி உலகபோகத்தினை நுகரச் செய்கின்றான். உயிர்கள் தம்மை அறியும் பக்குவத்தினை அடையும் பொருட்டே இறைவன் இதனைச் செய்கிறான். இது இறைவனின் மறைத்தல் தொழிலாக அமைகின்றது. திருக்கூத்தின் முயலகனை மிதித்துள்ள திருவடி மறைத்தலை உணர்த்துகின்றது.

பாசங்களை நீக்கி உயிர்களுக்குப் பேரின்பத்தினை வழங்குதல் அருளல் ஆகும். ஆன்மாக்களின் பிறவியின்று எடுத்துத் தன் திருவடி நிழலில் வைத்து அருளுதலை கூத்தபிரானின் தூக்கிய திருவடி உணர்த்துகின்றது.

சிவநடனத்தினை மூன்று வகையில் தரிசிக்கலாம். அவை மூன்று உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.

1. சிவாயநம என்னும் கேசாதி பாத நடனம் இதன்மூலம் அகிலநாதத்தை ஆத்மா உணரும். சிவனின் சடையில் உள்ள கங்கை ஆறு பிரபஞ்சத்தில் ஆத்மாவின் பாதையைக் குறிக்கும். இங்கு நீர்மூலக்கூறுகள் ஆத்மாக்களிற்கு உவமானம். நீர் அருவி கடலில் சென்று பின் மழையாகி மண்ணிற்கு வருவது போல் பிறவிப் பெருங்கடலும் அமைந்து உள்ளது. பிரபஞ்சத்தில் ஆத்மாவின் நிலையைத் திருமூலர் ஊமைக்கிணற்றுள் உள்ள ஆமை எனக் கூறுகின்றார்.

2. நமசிவாய என்னும் பாதாதி கேச நடனம் இதன்மூலம் ஆத்மா தன் நாதத்தை உணரும். நாதன் நடம் தில்லைச் சிற்றம்பலத்திலும் ஒவ்வோர் உயிர்களிடத்தே அறிவுநிலையிலும் நடைபெறுகின்றது. மனிதனின் புருவநடுவில் நாதத்தின் நடம் இடம்பெறுகின்றது. இதுவே மனித ஆன்மாக்களை இயக்குகின்றது. ஆன்மா அகக்கருவிகளை மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கைப்பற்றி நின்று உலகப் பொருள்களைச் சிறப்பாக உணர்ந்து கொள்கின்றது.

உயிருக்கு இயல்பாக உள்ளவை மூன்று அவையாவன :
1. ஒன்றினை அறிதல் – ஞானாசக்தி எனப்படும்.
2. அதனை விரும்புதல் – இச்சாசக்தி எனப்படும்
3. அதற்காக முயலுதல் – கிரியாசக்தி எனப்படும்.

உயிர் ஆணவமலத்தில் மறைந்துள்ளபோது கண்ணுக்குத் தெரியாத தத்துவவடிவமாகிய சாக்கிரம், சொப்பனம், சூழுத்தி, துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அவத்தைகளில் தொழிற்படும்.

இங்கு காலமும் சடப்பொருள்தான். அது தானாகச் செயற்படாது. இறைவனின் சக்தியினால் தன் காரியத்தைச் செய்யும். இதனை நமசிவாய என நாதனின் நடம் உணர்த்துகின்றது.

3. சிவசிவ என்னும் ஓங்கார நடனம் இதன்மூலம் அகில நாதத்தை அகிலம் உணரும். அகிலத் தோற்றத்தில் இருந்து அகில முடிவு வரையான இயக்கத்தை விளக்குகின்றது. இதன் மீளுகையைத் திருமூலர் பல்லூழி முதல்வன் எனக் கூறுகின்றார்.
4. திருக்கூத்தைத் தரிசிக்கும்போது உதறிய கை மாயையை உதறும் கையாகக் காணல் வேண்டும். வீசி அணைத்த கை வருக என அருள் வழங்கும் கையாக காணல் வேண்டும். வீசி அமைந்த கை இனித்திருக்க ஆறுதல் தரும் கையாக நோக்கல் வேண்டும். தீ ஏந்திய கை வினைகள்கெடத் திருவருள் வழி நிக்கச் செய்யும் கையாகும். ஊன்றிய திருவடி மலத்தை மிதித்து நிற்பதாக நோக்கல் வேண்டும்

பக்குவ ஆன்மாக்களுக்குச் சீவன் முத்திநிலையில் பேரானந்தத்தை இடையறாது தருகிற கூத்து ஆனந்த நடனம் ஆகும்.

கற்பனை கடந்த சோதி
கருணையே உருவமாகி
ஆடும் ஆனந்த நடனத்தை
சேக்கிழார் பெருமான் வர்ணித்து ஞானமேயான அருள்வெளியினை
‘அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம்’
எனக் கூறுகின்றார்.

இங்கு சித் என்றால் அறிவு. வியோமம் என்றால் வெளி எனப் பொருள்படும். அதாவது அறிவுப்பரவெளியினை நடராஜப்பெருமானின் திருநடனம் உணர்த்தி நிற்கின்றது. ஆன்மாக்களுக்கு பிறப்பு, வீடு இரண்டையும் இறைவன் தருகின்றான். இதில் பிறப்பை உணர்த்துவது சிவனின் ஊனநடனம். வீடுபேற்றைத் தருவது ஞானநடனம் ஆகும்.

மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய் தோற்றத்து
அவ்வாய அந்தக்கரணம் அகிலமும்
எல்லா உயிரும் இறையாட்ட ஆடலால்
கைவாய் இலாநிறை எங்கும் மெய்கண்டத்தே.
(திருமந்திரம் 2586)

சிவனின் ஊனநடனத்தின் பயனாக உயிர் உண்மைத்தன்மையினை உணரும். தத்துவங்கள் அனைத்தையும் தான் அல்ல என்று கண்டுகளித்து தன்னை அவற்றிற்கு வேருள சித்துப்பொருளாக உணரும். அதன்பின் தான் சித்துப் பொருளாயினும் தானே அறியும். சூக்குமசித்து அன்று என அறியும். மேலும் அறிவித்தால் அறியும் தூலசித்து எனத் தனது உண்மையை அறியும். இவ்வுண்மையையே சிவநடனம் உணர்த்துகின்றது. அதாவது தானே அறிந்தும் உயிர்களுக்கு அறிவித்தும் நிற்கும். சூக்கும சித்துத் தலைவனாக நாதன் நடனமிடுகிறான்.

இப்பிரபஞ்சத்தின் முழுமுதற் பொருள் சிவனே எனச் சைவசித்தாந்தம் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றது. இதனையே சிவராத்திரி தினத்தில் இறைவன் ஒளிப்பிழம்பாக விஸ்ணுவிற்கும் திருமாலுக்கும் உணர்த்தினார். இவ்வொளிப்பிழம்பு ஒடுங்கிய இடமே திருவண்ணாமலை. இது மகரஜோதியாக திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் நிகழ்ந்தது. கார்த்திகை நட்சத்திரத்திலேயே சிவனொளியில் இருந்து சரவணப் பொய்கையில் உலகம் உய் ஆறுமுகக்கடவுள் தோன்றினார். இது அகிலத்தின் திசை எங்கும் விளங்கும் அருள் ஒளியினை உணர்த்துவதாக உள்ளது.

ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும்
கூறு சமயக் குருபரன் நான் என்றும்
தேறினர் தெற்குத் திரு அம்பலத்துள்ளே
வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே.
(திருமந்திரம் 2758)

சிவநடனம் உணர்த்திய சிற்பரவியோமத்தினை இன்றைய இயற்பியலின் ஊடாக விஞ்ஞானிகள் இன்று அனுமானிக்க முயலுவதைக் காணலாம். ஆயின்;, கரும்துளைகளைச் சூழ உருவாகும் ஈர்ப்பு அலைகள் – காத்தல்ளூ அகிலத்தின் மென் விசைகள் – காத்தல்ளூ ஒளிக்கற்றைகளின் குவாண்டம் அதிர்வுகள் – மறைத்தல்ளூ நேர்க் கருந்துளை விசைகள் – அழித்தல்ளூ மறைக் கருந்துளை விசைகள் – அருளல்ளூ என அடங்கும்.