செய்திகள்

நான் சகல ஜோதிடர்களிலும் தற்போது நம்பிக்கையை இழந்துவிட்டேன்

புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது.ஸ்திரதன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏஎப்பி செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அதன் தமிழ் வடிவம்:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவரும் அவரது குடும்பத்தினரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். ஜனவரியில் தேர்தலில் தோற்ற 69 வயது முன்னாள் ஜனாதிபதி, தனது ஆட்சி ஊழல்நிறைந்தது என சித்தரிக்க முற்படுவதன் மூலமாக தன்னை மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்த முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக எதிர்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஓருவரிற்கு பதவிவழங்கியதின் மூலமாக ஊழலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை விசாரணையை எதிர்கொள்கின்றார். அவர்களிடம் ஆதாரங்கள் இல்லை, அவர்கள்கண்மூடித்தனமான ஆதாரங்களை குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என கொழும்பின் புறநகர் பகுதியில் வைத்து ஏஎப்.பி செய்திச்சேவைக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.அந்த இடம்பொலிஸ் மற்றும் இராணுவத்தின் கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் உள்ளது. நானோ அல்லது எனது குடும்பத்தை சேர்ந்தவர்களோ பிழையான வழியில் பணம் சேர்க்கவில்லை.

முதலில் அவர்கள் என்னிடம் சுவிஸ்வங்கிக்கணக்குகள் உள்ளதாக தெரிவித்தனர்,பின்னர் துபாயில் இருப்பதாக தெரிவித்தனர்,அந்த பணத்தை காண்பியுங்கள் ஆதாரங்கள் எங்கே? துபாயில் எனக்கு ஹோட்டலொன்று இருப்பதாக தெரிவித்தனர். அதன் பின்னர் இலங்கையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் என்னுடையது எனது சகோதரர்களுடையது என குறிப்பிட்டனர். இது ஓரு நகைச்சுவை என அவர் குறிப்பிட்டார். இலங்கையின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதியை வெள்ளிக்கிழமை தனது அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும் பின்னர் அவரது இல்லத்திற்கு சென்று வாக்குமூலம் பெற இணங்கியுள்ளது.

முன்னைய அரசாங்கத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்தவரும்,மகிந்தவின் சகோரதரரும் முன்னைய ஆட்சியின் பலம் என கருதப்பட்டவருமான கோத்தபாய ராஜபக்சவை வியாழக்கிழமை தனது அலுவலகத்தில் ஆஜராகுமாறு இலங்கையின் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. ராஜபக்சவும் அவரது நெருங்கிய சகாக்களும் பில்லியன் டொலர்கள்பெருமதியான ஊழல்களில் ஈடுபட்டதாக சிறிசேன அரசாங்கம் குற்றம்சாட்டிவருகின்றது.சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான செலவை அதிகமாக்கி காண்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் மற்றும் தற்போதைய மத்திய வங்கி ஆளுநர்களும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்பு ஓப்பந்தங்கள் மற்றும் விமானக்கொள்வனவுகள் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

ஊழல் குறித்த மறு ஆய்வுகளிற்காக சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட 1.4 பில்லியன் டொலர் போர்ட் சிட்டி திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.  இந்த திட்டம் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மகிந்தராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் உறவுகள்பலப்பட்டதற்கான அடையாளமாக காணப்பட்டது.இது பிராந்திய வல்லரசான இந்தியாவை சீற்றத்திற்குள்ளாக்கியது.
கடந்த வருட இறுதியில் கொழும்பு துறைமுகத்திற்கு இரு சீனா நீர்மூழ்கிகள் வருவதற்கு அனுமதிக்கப்பட்டமை இந்தியாவை சீற்றத்திற்குள்ளாக்கியது.  எனினும் இந்தியாவை கைவிட்டுவிட்டு சீனாவுடன் நெருக்கமானார் என்ற குற்றச்சாட்டை ராஜபக்ச மறுத்தார். நான் ஒருபோதும் சீனாவிற்கு சார்பாக செயற்பட்டதில்லை, இலங்கையின் நலன்களை மனதில் வைத்தே செயற்பட்டேன்,அனைத்து பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் முதலில் இந்தியாவிற்கே வழங்கினேன் ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை என்றார் அவர்.  குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தியது பாரிய தவறு என்பதை அவர் இந்த பேட்டியில் ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்னரே நடத்தியது மிகப்பெரும் தவறு,இதற்காக நான் தற்போது வருத்தமடைகிறேன்,குறிப்பிட்ட திகதியில் தேர்தல் நடத்தினால் எனக்கு வெற்றி நிச்சயம் என ஜோதிடர் தெரிவித்தார்.  நான் சகல ஜோதிடர்களிலும் தற்போது நம்பிக்கையை இழந்துவிட்டேன்.
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை,ஓய்வெடுக்கின்றேன்,புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது.ஸ்திரதன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டும், என அவர் தெரிவித்தார்.  ராஜபக்சவிற்கு ஆதரவான பாராளுமன்றத்தையே சிறிசேன சுவீகரித்தார்.அவர் அதனை கலைத்துவிட்டு விரைவில் தேர்தலை நடத்த இணங்கியுள்ளார்.
எனினும் இதுவரை அவரால் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைக்கும் முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றமுடியவில்லை.

(சமகளம் செய்தியாளர்).