செய்திகள்

நாம் உள்ளத்தால் விரும்பிச் செய்யும் நற்சேவைகள் என்றும் எம்மை வாழ்விக்கும்

மணி வாசகர் கூறியது போல நாம் உள்ளத்தால் விரும்பிச் செய்யும் நற்சேவைகள் என்றும் எம்மை வாழ்விக்கும்.நாம் வாழ்வில் முன்னோக்கிச் செல்வதற்கும் அல்லது பின்னடைவுகளைச் சந்திப்பதற்கும் நமது எண்ணம்,சொல்,செயல் என்பனவே காரணமாகும்.எங்களுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் நாமே பொறுப்பு.ஒரு மனிதன் விடும் தவறுகளை நாம் இன்னொரு மனிதரிடம் முறையிடுகிறோம்.இவ்வாறு கூறுவதால் எமக்கு எந்தவொரு நன்மையும் கிட்டப் போவதில்லை. நம்மை ஆற்றுப்படுத்தக் கூடியவை ஆன்மீக சிந்தனைகள்,ஆன்மீககக் கல்வி என்பன மாத்திரமே.  இவ்வாறு தெரிவித்தார் குப்பிளான் தெற்குப் பகுதியின் முன்னாள் கிராம சேவகரும்,சமாதான நீதவானுமான சோ.பரமநாதன்.

குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில்  22 ஆம் திகதி திங்கட்கிழமை மணிவாசகர் குருபூசை நிகழ்வு ஆச்சிரமப் பொறுப்பாளர் எஸ்.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடல்களைப் பண்ணோடு பாட வேண்டுமென எம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கின்றனர்.அவ்வாறு பண்ணோடு பாடுவதனூடாக நல்ல ஞானம்,புத்தி என்பன கிடைக்கும் என்பது அவர்கள் கணிப்பு.திருவாசகம் பாடும் போது உள்ளமுருகி,நெக்குருகிப் பாட வேண்டுமென்றெல்லாம் குறிப்பிடுவார்கள்.ஆனால் இந்தியாவிலேயுள்ள இசையமைப்பாளர்கள் திருவாசகத்தைப் புது மெட்டுடன் பாடிய ஒலிப்பதிவை நான் அண்மையில் கேட்கக் கூடியதாகவிருந்தது.அதனைக் கேட்ட பின்னர் எனக்கொரு எண்ணம் வந்தது.காலத்திற்கேற்ற வகையில் புதுமெட்டுடன் பாடப்படும் போது இளைய தலைமுறையினரையினரிடம் எமது பொக்கிஷமான திருவாசகத்தை இலகுவில் கொண்டு சென்று சேர்க்கலாம் எனக் கருதுகிறேன்.

திருவாசகம் எனும் தேனில் அடங்கியுள்ள அனைத்துப் பாடல்களையும் கருத்தூன்றிக் கற்றால் நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.மணி வாசகருடைய பாடல்களில் தாய் அன்பு,நாய் அன்பு என இரண்டு விடயங்கள் கூறப்படுகின்றது.தன்னை நாயாகவும்,இறைவனைத் தாயாகவும் அவர் காண்கிறார். சிறுபிள்ளைகள் மேடையில் கூச்சமின்றி ஏறிப் பேசுவதே பெரிய விடயம்.படித்துப் பட்டம் பெற்றவர்கள் கூட மேடையிலேறிப் பேசுவதில் தடுமாற்றமிருக்கிறது.இந்த நிலையில் சிறுவயதிலிருந்து பிள்ளைகளின் திறமைகளை இனங்கண்டு நாம் ஊக்குவிக்க வேண்டும்.

ஆலயங்களில் சிறு வயதில் நாம் மேடையேறிப் பேசுவதற்குக் கவிஞர் கந்தவனம் தான் எங்களுக்கு ஊன்றுகோலாயிருந்தார்.அவர் பேச்சு நன்றாகவிருக்கிறது.ஆனால் கைகால்கள்; நடுங்குகிறது என்று கூறுவார்.ஆனால் இன்றைய தினம் இந்த சிவபூமி ஆச்சிரமத்தில் பேசிய சிறு மாணவர்களிடம் பேசும் போது எந்தவொரு தயக்கமுமிருந்ததாகத் தென்படவில்லை.அவர்கள் தங்கள் உள்ளத்தில் தோன்றியதை அப்படியே கூறியிருக்கிறார்கள்.இவற்றுக்கு எங்களுடைய அதிபர்கள்,ஆசிரியர்களுடைய வழிகாட்டலே காரணமாகும்.

குப்பிளான் மண்ணிலே இந்தச் சிவபூமி ஆச்சிரமம் அமைந்து அரியபல சேவைகளை ஆற்றி வருகிறது.சனி தோறும் இங்கே கூட்டுப் பிரார்த்தனை இடம்பெறுகிறது.அதிலே மாணவர்கள் அதிகமாகக் கலந்து கொள்வதற்கு ஒவ்வொரு பெற்றோரும் ஊக்குவிக்க வேண்டும்.ஆன்மீக ஞானம் மூலம் பிள்ளைகள் கல்வியில் அக்கறையுடன் செயற்படுவதற்கு சமயக்கல்வி இன்றியமையாதது எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் தலைவர் மு.திருஞானசம்பந்த பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன் குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களின் பேச்சு,திருவாசகம் ஓதல்,பண்ணிசை போன்ற பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்றன.பாடசாலையின் உப அதிபர் திருமதி.விஜயராணி கிருபாரூபன் நன்றியுரை நிகழ்த்தினார்.அதனைத் தொடர்ந்து மணி வாசகர் திருவுருவப் படத்திற்குச் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து அன்னதானமும் இடம்பெற்றது. யாழ்.நகர் நிருபர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA