செய்திகள்

மகிந்தவுக்கு வாக்களிக்கவோ தேர்தலை புறக்கணிக்கவோ முடியாது: கல்குடாவில் பொன்.செல்வராசா

மைத்திரி தமிழர்களின் நண்பன் என்றோ தமிழர்கனுளுக்கு அனைத்தும் தருவார் என்றோ நாங்கள் கூறவில்லை. ஆனால் சிங்கள மக்களில் தமிழ் மக்களுக்காக பரிந்துரை செய்பவர்களில் சிலர் இவரை ஆதரிக்கின்றார்கள். எனவே எங்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று கூறலாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னனியின் எதிரணி பொது வெட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளின் அடிப்படையில் பிரச்சாரக் கூட்டங்கள் நடாத்துகின்றது.

அந்தவகையில் முதலாவது பிரச்சாரக் கூட்டம் கல்குடா தொகுதியில் நேற்று சனிக்கிழமை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான துரைராஜசிங்கம் அவர்களின் தலைமையில் வாழைச்சேனை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிககழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, மார்க்கண்டு நடராசா, கோவிந்தன் கருணாகரம், இந்திரகுமார் பிரசன்னா மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கிருஸ்ணபிளள்ளை செயோன் மற்றும் பொதுமக்கள் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி வருகின்ற போதுதான் இந்த நாட்டில் நல்லாட்சி நிலவும் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்தில் இருந்து அனுபவித்தது ஏராளம். அது போல் தமிழ் மக்கள் அரசாங்கத்தில் இருந்து அனுபவித்ததை விட முஸ்லிம் மக்கள் அனுபவித்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு இருந்த முஸ்லீம் மக்கள் மஹிந்த அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஏனெனில் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதாலேயே அவர்கள் எதிராக இருக்கின்றார்கள். சட்டத்தின் ஆட்சி இங்கு இருந்திருந்தால் முஸ்லீம் மக்கள் இன்று எதிராக இருந்திருக்க மாட்டார்கள். கல்குடா தொகுதி என்பது காலம் காலமாக தமிழர்களும் முஸ்லீம்களும் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அபிவிருத்தி செய்து வந்த தொகுதி. அந்தத் தொகுதியில் முஸ்லிம்கள் இன்று எதிராக நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்ட போது யார் கைது செய்யப்ட்டார்கள். பொதுபலசேனா பள்ளிவாசல்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது ஏன் அவர்கள் கைது செய்யப்படவில்லை. றிசாட் அவர்களின் அமைச்சினுள் பொதுபல சேன அட்டகாசம் செய்தபோது அவர்களுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை இவையெல்லாம் இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சியில்லை என்பதற்கு உதாரணமாக விளங்குகின்றன.

இன்று ஜனாதிபதி நான் உங்களில் ஒருவன் என்று கூறுகின்றார். அவ்வாறு கூறுவதற்கு அவருக்கு அருகதையிருக்கின்றதா. இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் காணிகளை சுவீகரித்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் ஜனாதிபதி எந்த அருகதையில் நான் உங்களில் ஒருவன் என்று கூறுகின்றார்.

எனவே இப்படிப்பட்ட அடாவடித்தனத்தையே இன்றும் செய்து கொண்டிருக்கின்றது. நாம் எப்படி மஹிந்தவிற்கு வாக்களிக்க முடியும் அதற்காக தேர்தலையும் பகிஸ்கரிக்க முடியாது. 2005ம் ஆண்டு தேர்தலை நாங்கள் பகிஸ்கரித்தமையால் தான் அதன் விளைவுகளை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். அன்று நாம் இந்தத் தேர்தலைப் பகிஸ்கரிக்காமல் இருந்திருந்தால் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோயிருக்க மாட்டார்கள் கோடிக்கணக்கான சொத்துக்கள் உடமைகளை மக்கள் இழந்திருக்க மாட்டார்கள். அப்படியான ஒரு பகிஸ்கரிப்பினை நாங்கள் செய்ய முடியுமா.

இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் தேவை என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்திருக்கின்றது. தமிழ் மக்கள் உணர்ந்தபின்னர் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்தது. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதை நினைக்கின்றதோ அதனைத் தான் தமிழர்கள் நடாத்திக் கொண்டு வருகின்றார்கள். சென்ற தேர்தலில் பரப்புரைகளை செய்யாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிய ஒரு வார்த்தையை கேட்டு மட்டக்களபப்பு மக்கள் சரத் பொன்சேகா அவர்களுக்கு வாக்கினை அள்ளிக் குவித்தார்கள் அதில் ராஜபக்~விற்கு எதிராக வாக்களித்ததில் பட்டிருப்பு தொகுதி சரித்திரம் படைத்தது.

எமது தமிழ் மக்களை எந்த முட்டுக் கொடுக்கின்ற அரசியல்வாதிகளாலும் மற்றிவிட முடியாது அவ்வாறு அவர்களால் முடியுமாக இருந்தால் சென்ற தேர்தலில் அவர்கள் வெற்றிபெற்றிருப்பார்கள். அந்த நாட்களில் தமிழ் அமைச்சர்கள் செய்யாத அபிவிருத்தி வேலைகள் இருக்கின்றனவா அவர்கள் மேற்கொண்ட அபிவிருத்தி வேலைகளை தமிழ் மக்களின் அபிலாசைகளையும் கருத்திற் கொண்டு மேற்கொண்டிருந்தால் அவர்களின் காலத்தின் பின்னர் ஏன் யுத்தம் இடம்பெற வேண்டும்.