செய்திகள்

நாலைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறோம்: டி.சிவா

நாலைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறோம் என்று 54321 திரைப்பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசினார்.

கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள படம் ‘54321: இப்படத்தை பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. ட்ரெய்லரை தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும் போது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இங்கு வந்தேன் .’54321’ படத்தின் ட்ரெய்லரையும் பாடலையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் படமோ என்று நினைத்தேன். அவ்வளவு அற்புதமாக இருந்தது. முதிர்ச்சியுடன் இருந்தது.

காட்சிகளைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது இதுதான் இதில் நடித்த நடிகர்கள் பெரிய அளவுக்கு வளர வேண்டும். நாங்கள் நாலைந்து நடிகர்களிடம் மாட்டிக் கொண்டு படாதபாடு படுகிறோம். பத்து கதாநாயகர்கள் பத்து கதாநாயகிகள் வந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. பிரச்சினை இருக்காது. இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும். சினிமாவில் நடிகர்களில் இரண்டு ரகத்தினர் இருக்கிறார்கள். சினிமாவை காக்கும் நடிகர்கள் ஒரு ரகம், சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இன்னொருரகம். இப்படி இருக்கிறது சினிமா.இவர்கள் வளர்ந்து தயாரிப்பாளர்களைக் காக்கும் நடிகர்களாக இருக்க வேண்டும். இந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று டி.சிவா பேசினார்.