செய்திகள்

தமக்கு ஆதரவளிக்குமாறு பிரெண்டன் மெக்கல்லம் இந்திய ரசிகர்களிடம் வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு ஆதரவு அளிக்க இந்திய ரசிகர்களுக்கு பிரெண்டன் மெக்கல்லம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியடைந்ததையடுத்து இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்வதை விரும்ப மாட்டார்கள் என்பதை மெக்கல்லம் நன்கு அறிந்துள்ளார் என்பது தெரிகிறது.

இந்நிலையில் அவர் எழுதிய கடிதம் வருமாறு, 

“இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும்,

உலகக்கோப்பையை வெல்வதற்கான தாகம் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் அறிவேன்.

ஏற்கெனவே எங்கள் அணிக்கு ஆதரவாக நீங்கள் பெரும் திரளாக திரண்டுள்ளீர்கள். நன்றி.

இப்போதும் உங்களது ஆதரவு எங்கள் அணிக்குத் தேவை. இறுதிப் போட்டியில் ஒவ்வொரு பந்துக்கும் உங்களது ஆதரவை நியூசிலாந்து அணிக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் கிரிக்கெட் வாழ்வில் இது மிகப்பெரிய தருணமாகும். இதில் லட்சக்கணக்கான குரல்கள் எங்களுக்காக எழுவது நிச்சயமாக எங்களுக்கு உதவும்.”

இவ்வாறு இந்திய ரசிகர்களை நோக்கி நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை காலை 9 மணிக்கு ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இறுதிப் போட்டி மெல்போர்னில் தொடங்குகிறது.