செய்திகள்

நாளைய போராட்டத்தில் அனைவரும் அணிதிரள வேண்டும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

யாழ் பல்கலைக்கழக சமூகம் நடாத்தும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“ஐநா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவிருந்த நிலையில் குறித்த அறிக்கை வெளியிடப்படுவது 6 மாதங்களுக்குப் பிற்போட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்படி அறிக்கையை வெளியிடுவதனை பிற்போடும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை கண்டித்தும் எவ்வித காலதாமதமும் இன்றி அந்த அறிக்கையை உரிய நேரத்திற்கு வெளியிட வேண்டுமென வலியுறுத்தியும் யாழ் பலக்லைகழக சமூகம் எதிர்வரும் 24-02-2015 அன்று நடாத்தவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முழுமையான ஆதரவினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேற்படி போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு தமிழ் மக்களது உள்ளக் கிடக்கையை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்த அணிதிரளுமாறு அiறைகூவல் விடுக்கின்றோம்.”