செய்திகள்

நாளை முதல் பொது போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் : விபரங்கள் இதோ

நாளை முதல் பொது போக்குவரத்து சேவைகள் நடைபெறவுள்ள நிலையில் இதன்போது அவற்றில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்வோருக்காகவே பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவுள்ளதுடன் இதற்காக 5000 இ.போ.ச பஸ்கள் சேவைகளில் ஈடுபடவுள்ளன. இதன்போது ஒரு பஸ்ஸில் 25 பேருக்கே பயணிக்க முடியும். பஸ்களில் பயணம் செய்யக் கூடியோரின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைக்கப்பட்டுடள்ளது.
அதேபோன்று அலுவலக ரயில்களில் பெட்டியொன்றில் 50 பேர் வரையிலேயே பணிக்க முடியும்.
பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது முகக் கவசங்கள் அணிந்திருப்பது கட்டாயமாகும்.
ரயில் நிலையங்கள் , பஸ்நிலையங்களிலும் மற்றும் வீதிகளிலும் , ரயில் பாதைகளிலும் எச்சில் துப்புவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இருமல் , தடிமன் இருக்குமாக இருந்தால் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொது போக்குவரத்தில் கடைபிடிக்க வேண்டிய மேலதிக விபரங்கள் வருமாறு,
* சகல ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் உஷணத்தை அளவிடுதல் மற்றும் யாருக்கேனும் காச்சல் , இருமல் இருக்குமாக இருந்தால் உடனடியாக அந்த நபர் தொடர்பாக சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுதல்
* போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வழங்குதல்
* ரயில்வே கட்டளை சட்டத்தை கடுமையாக செயற்படுத்துதல். அதன்படி ரயில்களுக்குள்ளும் ரயில் பாதைகளிலும் எச்சில் துப்ப தடை விதித்தல் , ரயில் நிலையங்கள் , ரயில் பெட்டிகளுக்குள் வியாபார செயற்பாடுகளில் ஈடுபடவும் மற்றும் யாசகத்தில் ஈடுபடவும் தடைவிதித்தல்.
* சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஆலோசனைகளுக்கமைய ரயில்கள் மற்றும் பஸ்களில் பயணிப்போர் முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தல் , பயணிகளுக்கிடையே ஒரு மீற்றர் என்ற இடைவெளியை பேணுதல் போன்ற சுகாதார பரிந்துரைகளை கட்டாயமாக செயற்படுத்தல்
* சகல ரயில் நிலையங்கள் , ரயில் பெட்டிகள் மற்றும் பஸ்களை குறைந்தது இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையாவது தொற்று நீக்கி திரவங்களை தெளிக்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தல்
* அத்தியாவசிய சேவைக்கு உட்படாத எந்தவொரு நபருக்கும் ரயில் மற்றும் பஸ்களுக்குள் அனுமதிக்காமை , சிலர் உறவினர் வீடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளக் கூடும் என்பதால் அவர்களுக்கு இடமளிக்காமை
நாளை முதல் 5000 இ.போ.ச பஸ்களும் 400 ரயில் சேவைகளும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. -(3)