செய்திகள்

நாளை யாழ் வருகின்றார் ஜனாதிபதி மகிந்த: கூட்டத்துக்கு ஆட்சேர்க்க 450 பஸ்கள்

தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணத்துக்கு நாளை வெள்ளிக்கிழமை செல்லும்  ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள அதேவேளையில், அவரது பிரதான உரை நடைபெறும் துரையப்பா விளையாட்டு அரங்குக்கு ஆட்களைக் கொண்டு செல்வதற்காக 450 போக்குவரத்துச் சபை பஸ்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் 150 பஸ்கள் வடபிராந்திய போக்குவரத்துச் சபையிடமிருந்து பெறப்பட்டுள்ள அதேவேளையில், சுமார் 300 பஸ்கள் தெனபகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன. வடபகுதியிலிருந்து 150 பஸ்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தமையால்தான் ஏனைய 300 பஸ்களும் தென்பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த பஸ்கள் ஈ.பி.டி.பி.யினருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கையனுக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் சமூர்த்தி உதவி பெறுபவர்கள் நாளைய தினம் இடம்பெறும் கூட்டத்தில் கட்டாயம் பங்குகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நாளை  யாழ். செல்லும் ஜனாதிபதி காங்கேசன்துறை ரயில் நிலையத்தைத் திறந்துவைத்து அங்கிருந்த ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பார். அதில் முதலாவது பயணியாக அவர் யாழ் ரயில் நிலையத்தை வந்தடைவார்.

அதன் பின்னர் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பார். அத்துடன் யாழ். ரில்கோ ஹோட்டலில் நடைபெறும் தொழிசார்வல்லுநர்களின் ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்துகொள்வார்.  பின்னர் மன்னார், வவுனியாவில் நடைபெறும் பிசாரக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை,

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து யாழ். ரயில் நிலையம் வரையான ஒவ்வொரு ரயில் நிலையங்களுக்கும் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களும் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு மக்களை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபடுத்துவதற்காக இன்றைய தினமே வலி.வடக்கு பகுதியை நோக்கிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது.