செய்திகள்

நாளை 8 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 8 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 24-ந் தேதி வரை 47 நாட்கள் இந்த கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்பட 12 மைதானங்களில் இந்த போட்டி நடக்கிறது.

இதில் 2 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2012, 2014) ஒரு முறை சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ், (2008), மும்பை இந்தியன்ஸ் (2013) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் 14 ‘லீக்’ ஆட்டங்களில் மோதும். உள்ளூர், வெளியூர் மைதானங்கள் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் விளையாடும் ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

மே 17-ந் தேதி வரை ‘லீக்’ ஆட்டம் நடைபெறும். ‘பிளே ஆப்’ சுற்று மே 19-ந் தேதி தொடங்குகிறது. மே 24-ந் தேதி கொல்கத்தாவில் இறுதிப்போட்டி நடக்கிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு நடை பெறும் இந்த ஆட்டம் சோனி மேக்ஸ், சோனா சிக்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணிகளும் சம பலம் பொருந்தியவை என்பதால் தொடக்க ஆட்டமே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் 14 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 10 தடவையும், கொல்கத்தா 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.