செய்திகள்

நிதிமோசடி: சஷி வீரவன்ச 6 மணி நேரம் விசாரணை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கணவர் விமல் வீரவன்சவுடன் காலை 9.15 மணிக்கு இவர் கொள்ளுப்பிட்டியிலுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகியிருந்தார்.

காணி விவகாரம் தொடர்பில் இவர் மீது விசாரணை நடத்தப் பட்டுள்ளது. சொத்து விபரங்கள் தொடர்பாக பிற்பகல் 2.30 மணிவரை சுமார் 6 மணித்தி யாலங்கள் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காணி விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு கடந்த 28ஆம் திகதி இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அன்றையதினம் உடல்நிலை சரியில்லையெனக் கூறி 4ஆம் திகதிக்கு தவணை பெற்றிருந்தார். இதற்கமைய நேற்று இவர் விசாரணைகளுக்கு ஆஜராகியிருந்தார்.

சஷி வீரவன்ச வழங்கிய வாக்குமூலம் மற்றும் தகவல்கள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் திருப்தியடையாத பட்சத்தில் பணமோசடி பிரிவின் கீழ் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலியான கடவுச்சீட்டு வைத்திருந்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.