செய்திகள்

நித்தியின் ஆசிரமத்தில் மரணமான பெண்ணின் உடல் மறு பரிசோதனை

நித்தியானந்தாவின்  பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த   இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் மறு பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன்  -ஜான்சிராணி ஆகியோரின் மகள் இளம் பெண் சங்கீதா என்பவர், நித்தியானந்தாவின்  பெங்களூரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

இவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மகளின் உடலைத்  தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் ஜான்சிராணி, திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்திலும், அடுத்து கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஆர்.குப்தாவிடம் புகார் அளித்தார். அப்போது  புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குப்தா உறுதியளித்தார்.

இதனைத்  தொடர்ந்து நேற்று கர்நாடகத்திலிருந்து பிடரி காவல்நிலைய எஸ்.ஐ லோகித் தலைமையிலான மூன்று போலீஸார் அடங்கிய தனிப்படையினர், திருச்சி வந்து மறு பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளைச்  செய்தனர்.  முதலில் திருச்சி மாவட்ட எஸ்.பி ராஜேஸ்வரியைச்  சந்தித்த கர்நாடக காவல்துறையினர், மறு பிரேத பரிசோதனை நடத்துவதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினர்.

அடுத்து அந்த தனிப்படை, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரிக்குச்  சென்று  உடற்கூறியியல் தலைமை மருத்துவர் சரவணனை சந்தித்து, மறு பிரேத பரிசோதனை செய்வதற்கான மனுவை வழங்கினார்கள். மனுவை பெற்றுக்கொண்ட மருத்துவர் சரவணன், இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் என்று தெரிவித்தார்.