செய்திகள்

நியதிச்சட்டம்; நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த போதும் கிடப்பில் காணப்படுகிறது: சத்தியலிங்கம் ஆதங்கம்.

நாங்கள் எங்களுடைய வடக்கு மாகாண சபைக்குரிய நியதிச்சட்டங்களை உருவாக்க வேண்டிய தேவையிருந்தது.அந்த வகையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சுகாதார சம்பந்தமான நியதிச்சட்டங்களை நிறைவேற்ற எண்ணியிருந்தோம்.ஆனால்,சட்டச் சிக்கல்கள் காரணமாகக் கடந்த ஆறு மாதத்துக்கு முன்னரே நியதிச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.அந்த நியதிச் சட்டம் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆளுநருடைய அனுமதி எப்போது வழங்கப்படுகிறதோ அன்றிலிருந்து அந்த நியதிச் சட்டம் நடைமுறைக்கு வரும்.ஆனால் எங்கள் மாகாணத்துக்குரிய நியதிச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த போதும் நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்கள் எங்களுடைய கைகளுக்குக் கிடைக்கவில்லை.எங்களுடைய மாகாணத்திற்குரிய நியதிச்சட்டம்; நிறைவேற்றப்பட்ட போதும் எந்தவொரு பதிலுமின்றி கிடப்பில் காணப்படுகிறது.நாங்கள் இவ் விடயம் சம்பந்தமாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.வெகு விரைவில் இதற்குரிய தீர்வினைத் தருவதாக அவர் எங்களிடம் உறுதியளித்துள்ளார் எனத் தெரிவித்தார் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி மு.உமாசங்கரைப் பாராட்டி சேவை நயப்பு விழா இன்று புதன்கிழமை(01.7.2015) வைத்தியசாலையின் புற்றுநோய்ச் சிகிச்சைப் பிரிவு மாநாட்டு மண்டபத்தில் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி யோ.திவாகர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெல்லிப்பழை வைத்தியசாலையின் வைத்தியகுழாம் என்னைச் சந்திக்க வரும் போதேல்லாம் எனது இதயத்துடிப்பு சற்று அதிகமாகும்.இன்று கூட மேடையில் என்ன கதைக்கப் போகிறார்களோ என்பதே எனது எண்ணமாகவிருந்தது.இந்த வைத்தியசாலையின் தேவைகள் என்பது மிக அதிகமானது.இந்த வைத்தியசாலை பாரிய நெருக்கடிகளுடனும்,தேவைகளுடனும் இயங்கி வருகின்றது என்பது எனக்குத் தெரியும்.கிழக்கு மாகாணத்திலிருந்து கூட இந்த வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வருகிறார்கள்.இதன் காரணமாக இந்த வைத்தியசாலையின் வைத்திய குழாமினர் அடிக்கடி எங்களைச் சந்தித்துப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளது.இவ்வாறான தேவைகளை எமது மாகாண அமைச்சால் முழுமையாக நிறைவேற்ற முடியுமா?என்கிறதொரு அச்ச நிலையும் எம்மிடம் காணப்படுகிறது.

இந்த வைத்தியசாலை தொடர்பாகப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.என்னிடம் பலரும் மாகாண சபையால் இந்த வைத்தியசாலையை நிர்வகிக்க முடியாது மத்திய அரசிடம் கையளியுங்கள் எனத் தெரிவித்தார்கள்.நான் அவர்களிடம் இவ்வாறான வைத்தியசாலையை எமது மாகாண சபையால் நிச்சயம் நிர்வகிக்க முடியும் என்று கூறினேன்.இதனையொரு சவாலாக ஏற்று  நாங்கள் மத்திய அரசிடம் நேரடியாகத் தொடர்புகளை மேற்கொள்வதுடன் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளிடமும்,நிறுவனங்களிடமும் கலந்துரையாடி இந்த வைத்தியசாலையை சிறப்பாக இயங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என இச்சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகிறேன்.

இந்த வைத்தியசாலையின் தேவைகள் என்பது இலட்சக்கணக்கில் கதைக்கப்படுகின்ற தேவைகளல்ல.மில்லியன் கணக்கான தேவைகள் காணப்படுகின்றன.அதிலும் குறிப்பாகப் புற்று நோய் வைத்தியசாலையை நிர்வகிக்கப் பெரும் தொகை நிதி தேவைப்படுகிறது.இது தொடர்பாக நாங்கள் பலமட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் அண்மையில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவை சந்தித்துக் கதைத்த போது மாகாண சபைக்குட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அமைச்சின் கீழ் கொண்டு வருவதை தான் முற்றாக மறுக்கிறேன்.ஆனால்,உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் கூறினார்.நாட்டிலுள்ள ஏனைய புற்றுநோய்ப் பிரிவுகளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ளது.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவு மாத்திரம் மாகாண அரசின் கீழ்வருகிறது.நாங்கள் ஏனைய 7 புற்றுநோய்ப் பிரிவுகளையும் கூட மாகாண அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் கூறினார்.

இந்த வைத்தியசாலையில் ஒரு நிர்வாகம் காணப்படும் போதும் ஆதார வைத்தியசாலை என்ற பேரில் இந்த வைத்தியசாலை இயங்குகிறது.கணக்கை இரு பிரிவுகளாக வைத்திருங்கள்.கடந்த வருடம் இந்த விடயம் தொடர்பில் நாம் கதைத்த போதும் 2015 ஆம் ஆண்டு எங்களுடைய பாதீட்டில்  இரு கணக்குகளை ஆக்கியுள்ளோம். அதற்குத் தேவையான செலவினை வழங்குவதாகவும் அமைச்சர் தம்மிடம் கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.