செய்திகள்

நியமனத்தை வலியுறுத்தி மட்டு. முன்பள்ளி ஆசிரியர்கள் பேரணி

தம்மையும் அரச ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கவன ஈர்ப்பு போராட்டம் மற்றும் பேரணியை மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் நடத்தினர். மட்டக்களப்பு இன்று காலை கவன ஈர்ப்பு போராட்டத்தினை நடத்தியதுடன் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்றனர்.

அங்கும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகள் உள்வாங்கப்பட்டு அவை தீர்த்துவைக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணசபையினால் கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளையும் நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

சுமார் 30 வருடத்துக்கு மேல் முன்பள்ளி ஆசிரியர்களாக பலர் கடமையாற்றிவருகின்றபோதிலும் அவர்களின் பிரச்சினைகள் எதனையும் இதுவரையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் அவர் கோரிக்கை விடுத்தனர்.

கவன ஈர்ப்பு பேரணியில் கலந்துகொண்டோர் “முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும்”,”ஆரம்ப கல்விக்கு அடித்தளம் இடும் எமக்கு அரசு வழங்கும் ஆதரவு போதுமா”, “முன்பள்ளி ஆசியர்களுக்கு விடிவு எங்கே”,முடிவு வரும் வரை முன்பள்ளி மூடப்படும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.

கவன ஈர்ப்பு போராட்டம் முடிவில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.அந்த மகஜரில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல வருடகாலமாக சிறார்களின் ஆரம்பகால ஆளுமை விருத்திக்கும் அவர்களின் சிறந்த கல்விக்கான அத்திவாரத்துக்கும் நாட்டுக்கு தேவையான சந்ததிகளை வித்திடும் வகையில் தொண்டர் ஆசியர்கள் அடிப்படையில் அர்ப்பணிப்பான சேவையில் முன்பள்ளி ஆசியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

அண்மைக்காலத்தில் கிழக்கு மாகாணசபையாலும் கல்வி திணைக்களத்தினாலும் முன்பள்ளி ஆசியர்களை உள்வாங்கி அவர்களுக்கான நியமனங்கள் வழங்குவதாக கருத்துகள் வெளிவந்தபோதிலும் அது தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் மிகவும் மன வேதனைக்குள்ளானோம்.

எனவே முன்பள்ளி ஆசியர்களை அரச சேவையில்இணைத்துக்கொண்டு அவர்களுக்கான ஊக்குவிப்புகளையும் நியாயமான கொடுப்பனவுகளையும் வழங்கும்பட்சத்தில் அனைத்து ஆசிரியர்களும் கடமையுணர்வுடன் சேவைபுரிவோம் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_0255 IMG_0262 IMG_0265 IMG_0266 IMG_0270 IMG_0273 IMG_0286