செய்திகள்

நிரந்தரத் தீர்வுக்கான அடிப்படையை ‘நூறு நாள் ஆட்சி’ ஏற்படுத்தும்: மனோ கணேசன்

“இந்த நூறு  நாட்களுக்கு பிறகு வரும் அந்த அரசாட்சியில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நாம் முழுமையாக எம்மை அர்ப்பணிப்போம். அதற்கான அடிப்படையை இந்த நூறு  நாள் ஆட்சி நிச்சயமாக ஏற்படுத்தி வருகிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என . ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக கொழும்பு வாரப்பத்திரிகை ஒன்றுக்கு வெளிப்படுத்தியுள்ள கருத்திலேயே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

“ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு, ஒரு இடைக்கால அரசு. நூறு நாள் என்றால் ஏறக்குறைய மூன்று  மாதங்கள். இந்த மூன்று மாத ஆட்சி, இடைக்கால ஆட்சி என்ற விடயம் புதிதாக கண்டு பிடித்து சொல்லப்பட்ட ஒரு விடயம் அல்ல. இது இப்படித்தான் இருக்க முடியும் என்பதை நான் தேர்தலுக்கு முன்பே மிகத்தெளிவாக அனைத்து ஊடகங்களிலும் பலமுறை கூறியுள்ளேன்.

இது நிரந்தர ஆட்சியல்ல

நிரந்தர ஆட்சி என்பது அடுத்த பொது தேர்தலுக்கு பிறகுதான் உருவாக முடியும். இதற்கு காரணம் இன்று ஜனாதிபதி புதியவராக இருக்கின்றாரே தவிர, பாராளுமன்றம் பழையதுதான். ஆகவே இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்ற மக்களால் நிராகரிக்கப்பட்ட பல வெற்று வேட்டுகளுடன்தான் நாம் தற்சமயம் கூட்டு குடித்தனம் நடத்த வேண்டியுள்ளது. அடுத்த பொது தேர்தலின் பின்னர் இவர்களில் கணிசமானோர் பாராளுமன்றம் வர மாட்டார்கள். இது இவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனாலும் தங்களது ஆட்டம் முடிந்து விட்டது என இவர்களில் யாரும் நாகரிகமாக ஒதுங்க தயாரில்லை. கடைசி தினம் வரை வரப்பிரசாதங்களை அனுபவிக்கவே இவர்கள் விளைகிறார்கள்.

எனவே இன்றைய இவர்களது கடைசி காட்சி நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுதான் நமது அரசு செயற்பட வேண்டியுள்ளது.  இவர்களை திருப்தி படுத்தி வைத்துக்கொண்டால்தான் நூறு நாள் ஓடும். எனவே நாம் விரும்பும் பல முன்னெடுப்புகளை இப்போது எம்மால் செய்ய முடியாமல் இருக்கின்றது. அதற்காக இவர்களின் இழுப்புகளுக்கு எல்லாம் இடம் கொடுக்க முடியாது. இவர்களது நிர்ப்பந்தம் அளவுக்கு அதிகமானால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உடன் தேர்தல்தான் என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உண்மைகளை நாம் நினைவில் நிறுத்திக்கொண்டுதான் நூறு நாள் வேலைத்திட்டத்தை நாம் பார்க்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினை

தற்போது, நூறு நாட்களில், மூன்றில் ஒரு பகுதி முடிந்து விட்டது. சிறுபான்மை என்ற சொல்லை முடிந்தவரை தவிர்ப்போமே. எனவே தமிழ் பேசும் மக்கள் என்று எடுத்துகொண்டால் வடகிழக்கு மற்றும் தென்னிலங்கை மலையக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள்.

தமிழ் பேசும் மக்களின் இனரீதியான திட்டங்களையோ, குறிப்பாக தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவோ நாம் இந்த நூறு நாள் வேலைதிட்டத்தில் பெரிதாக குறிப்படவில்லை. இதன் காரணம் இரகசியமானது அல்ல. மகிந்த ராஜபக்ச அணியினருக்கு தனது இனவாத கொள்கை பிரச்சாரத்தை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு காரணமாக நாம் இந்த முடிவை எடுத்தோம். தேர்தலுக்கு முன்பே இதையும் சொல்லித்தான் மக்களின் வாக்குகளை பெற்றோம். ஆகவே யாரும் ஒன்றை சொல்லிவிட்டு வேறு ஒன்றை செய்கிறோம் என்று விமர்சிக்க முடியாது.

இனரீதியாக பார்க்கப்படாமல், தொலைந்துப்போன ஜனநாயக வெளியை மீண்டும் கொண்டு வருவது என்ற அடிப்படையில் விவகாரங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளன.

வடக்கில் மாற்றங்கள்

ஒன்று, வடக்கில் கிழக்கில்  படைத்துறை பின்னணி கொண்ட ஆளுநர்கள் மாற்றப்பட்டு, சிவில் துறையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஒத்துழைக்காத மாகாண செயலாளர் மாற்றப்பட்டு, மக்களின் ஆணையை பெற்றுள்ள முதல்வருடன் ஒத்துழைக்கும் செயலாளர் வடமாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி மக்களிடம் மீள கையளிக்கப்படல் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன.

காணி விடயத்தில் அரசு, வலி-வடக்கில் ஆயிரம் ஏக்கரை விடுவிக்க முன்வந்துள்ளது. எனினும் இந்த முயற்சி மக்களால் நிராகரிக்கப்பட்ட பழைய முயற்சி என்று இன்று தெரிய வந்துள்ளது. அங்குள்ள ஒரு காணி பரப்பில்  குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டு, மக்களை குடியேற்றி, அதன் மூலம்  வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் என்ற பிரிவினர் கிடையாது என்ற கருத்தை உருவாக்க இராணுவம் மேற்கொண்ட பழைய சூழ்ச்சி என்பது இதுவென இப்போது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி என்க்கு விளக்கமாக எடுத்து கூறினார். மேலும் இதுபற்றிய ஆவணங்களையும் தருவதாக உறுதியளித்துள்ளார். இதன்மூலம் இதுபற்றிய உண்மை நிலைமையை  என்னால் தேசிய நிறைவேற்று சபையில் எடுத்துக்கூற முடியும்.

எனினும் இந்த “காணிகளை விடுவித்தல்” என்ற பிரச்சினை இன்று ஒரு முன்னணி பிரச்சினையாக இந்த ஆட்சியில் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும், இதுபற்றிய   நீதிமன்ற தீர்ப்புகளைகூட கணக்கில் எடுக்காத கடந்த மகிந்த ஆட்சியுடன் ஒப்பிடும் போது இது முன்னேற்றக்கரமானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கைதிகள் விவகாரம்

அடுத்தது, அரசியல் கைதிகள் விவகாரம். இதுபற்றி நான் தேசிய நிறைவேற்று சபையின் முதற்கூட்டத்திலேயே பிரஸ்தாபித்து, அரசின் அதிகாரபூர்வ பெயர் பட்டியலை கேட்டேன். முதற்கட்டமாக சிறைக்கைதிகளின் பட்டியல் எனக்கு கிடைத்துள்ளது. இப்போது இரண்டாம் கட்டமாக பயங்கரவாத தடுப்பு பிரிவில் உள்ளோரின் பட்டியல் கிடைத்துள்ளது. அடுத்தது, படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுபவர்களின் பட்டியலையும்  கோரியுள்ளேன். இதை அமைதியாக செய்து வருகிறேன்.

அரசியல் கைதிகள் என்ற பேச்சையே எடுக்க முடியாமல் இருந்த கடந்த ஆட்சி காலத்தை விட முன்னேற்றக்கரமானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மலையகப் பிரச்சினை

அடுத்து மலையகம். அங்கே காணியுரிமை, சொந்த வீடு, அதுவும் தனிவீடு மற்றும் கல்வி என்ற நிலைப்பாடுகளை முன்வைத்துதான் நாம் மைத்திரி-ரணில் அணியுடன் அன்று பேசியிருந்தோம். இன்று நண்பர்கள் திகாம்பரம், ராதாகிருஷ்ணன், வேலாயுதம் ஆகியோர் இந்த துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

மலையகத்தில் கடந்த கால அலங்கோலங்களுக்கு மாறாக இன்று இந்த காணி-வீடு-கல்வி கொள்கை ஆக்கபூர்வமாக முன்னேடுக்கப்படுகின்றது. இதற்கு தேவையான ஒத்துழைப்பை  இந்திய தூதரகத்திடமும் நாம் பெற்று வருகிறோம். இவை தொடர்பாக உருவாகக்கூடிய சிக்கல்களை தேசிய நிறைவேற்று சபை மட்டத்தில் எடுக்க நான் இருக்கிறேன்.

கல்வி வளர்ச்சி

கொழும்பு மாவட்ட கல்வி வளர்ச்சி தொடர்பாக, அனைத்து கொழும்பு  மாவட்ட தமிழ் பாடசாலைகளையும் இணைத்து ஒரு பாரிய வளர்ச்சி திட்டத்தை நான் இப்போது தயாரித்து கொண்டுள்ளேன். அவற்றுக்கு கல்வி அமைச்சர், ராஜாங்க அமைச்சர், மாகாண கல்வி அமைச்சர், வெளிநாட்டு தூதரகங்கள், புலம் பெயர்ந்த அமைப்புகள் ஆகியவற்றின் உதவிகளை பெறும் நோக்கில் முதல்கட்ட வேலைகளை செய்து வருகிறேன்.

இவை தொடர்பில் நமது இந்த ஆட்சியில் எனக்கு எந்தவித தடையும் கிடையாது. கடந்த ஆட்சி காலத்தை விட இது முன்னேற்றக்கரமானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்வரும் தேர்தலின் பிறகு அமையவுள்ள நிரந்தர தேசிய அரசில் நமது கட்சியின் சார்பாக நான் பலம் வாய்ந்த ஒரு அமைச்சராக இடம்பெறுவேன் என்பதில் எனக்கோ, எனது மக்களுக்கோ எந்தவித சந்தேகமும் கிடையாது. இந்த நூறு  நாட்களுக்கு பிறகு வரும் அந்த அரசாட்சியில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நாம் முழுமையாக எம்மை அர்ப்பணிப்போம். அதற்கான அடிப்படையை இந்த நூறு  நாள் ஆட்சி நிச்சயமாக ஏற்படுத்தி வருகிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.