செய்திகள்

நிறுவன உரிமையாளர் தாக்கி ஊழியர் படுகாயம்

இச்சம்பவம் வாழைச்சேனையிலுள்ள பிரபல முதலீட்டு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளது. கல்லடியைச் சேர்ந்த டைசோ டில்மா என்ற இளைஞனே இவ்வாறு தாக்குதலுக்கிலக்காகியுள்ளார்.

குறித்த நிறுவனமானது விடுமுறை வழங்காது தொடர்ச்சியாக உழியர்களை வேலைச்செய்ய சொல்வதன் காரணமாக அதில் இருந்து விலகிச்செல்வதற்கு குறித்த இளைஞன் அனுமதி கேட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞனை வெள்ளிக்கிழமை (01) ஒன்றுகூடலுக்கு வருமாறு அழைத்து, நிறுவனத்தின் உரிமையாளரும் சக ஊழியர்களும் இணைந்து சரமாரியாக தாக்கி வீதியில் வீசி சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞர் சக ஊழியர்களின் உதவியுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பிரதேச பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,

உழைக்கும் வர்க்கத்தினரை கௌரவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் மே தினம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் ஊழியர் ஒருவர் இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டுள்ளதானது மிலேச்சத்தனமான செயலாகும். வாழைச்சேனையில் உள்ள குறித்த முதலீட்டு நிறுவனம் ஒரு பதிவுசெய்யப்படாத நிறுவனம் ஆகும்.

அத்துடன் அதன் உரிமையாளர் துப்பாக்கியும் வைத்துள்ளார். அந்த துப்பாக்கி அவரிடம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தவேண்டும் என்றார்.

IMG_8693