செய்திகள்

நிறைவேற்று அதிகாரத்தை இந்த அரசு ஒழிக்கமாட்டாது: மகிந்த கூறுகிறார்

இந்த அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்குமென நான் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்குவந்த ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த அரசாங்கத்தில் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதென்பது சாதாரண வாதமாகும். இதனை ஒழிப்பதற்கான செயன்முறை இதில் இல்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படுமென நான் நினைக்கவில்லை.

புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள திருத்தச் சட்டமூலத்தை நான் இதுவரை வாசித்துப் பார்க்கவில்லை. ஆனால் இத்திருத்தச் சட்டத்தினூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் காணப்படும் சில அதிகாரங்கள் குறைக்கப்படுமென நான் நம்புகிறேன்.

இந்த அதிகாரக் குறைப்பினை இந்த அரசாங்கத்தால் மட்டுமே முன்னெடுக்க முடியும். காரணம் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் ஆதரவும் உள்ளது. இதனை வேறொரு அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியாது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்கின்றன. ஏன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட இந்த அரசாங்கத்தின் பக்கம் தான் உள்ளது. ஆளும்தரப்பும், எதிர்த்தரப்பும் அரசாங்கத்துடன் இருப்பதால் இந்த அரசாங்கத்துக்கு எதனை வேண்டுமானாலும் செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.