செய்திகள்

நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்தியதாலேயே கூட்டமைப்பினர் சுதந்திரமான பேசுகின்றார்கள்: அங்கஜன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துகிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டே தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எதிர்தரப்பு பொது வேட்பாளருக்கு மக்களை வாக்களிக்கும்படி கூறிவருகிறார்கள். தமிழ்க் கூட்டமைப்பினர் தற்போது சுதந்திரமாகப் பேசவும் சுதந்திரமாக நடமாடவும் அவர்களுக்கு வழிவகுத்தது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமே என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரம் யாழ்ப்பாணம் துரைப்பா விளையாட்டரங்களில் இடம்பெற்றபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் : –

கடந்த பல ஆண்டுகளாக எதையுமே செய்ய முடியாத நிலையில் மௌனிகளாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு இன்று சுதந்திரமாகப் பேசுவதற்கும், சுதந்திரமாக நடமாடுவதற்கும் தனது நிறைவேற்று அதிகாரம் மூலம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு, அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். இதனாலேயே இன்று கூட்டமைப்பினர் சுதந்திரமாக பேசுகின்றனர்.

தமிழ் மக்களே உங்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியது யார்? குடாநாட்டின் அபிபிருத்தியைச் செய்தது யார்? நீங்கள் நிம்மதியாக இருப்பதற்கு காரணம் யார்? யுத்தத்தின் பின்னர் குடாநாட்டின் கல்வி வளர்ச்சிக்கு காரணம் யார்? என்பதனை நன்கு புரிந்துகொண்டு கொண்டு, நன்றாக சிந்தித்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உங்கள் வாக்குகளை வழங்கவேண்டும். எமது சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கும் இவ் வேளையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவருக்கு இந்த முறையாவது உங்கள் வாக்குகளை அளியுங்கள். எமது எதிர்காலம் நிச்சயம் வளம்பெறும் என்பதனை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். வட பகுதி வாக்காளர்களான நீங்கள் அத்தேர்தல்களில் மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை.

நீங்கள் வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதியாக வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பெருந்தன்மையோடு வடபகுதியை அபிவிருத்தி செய்வதில் அக்கறையோடு செயற்பட்டிருக்கிறார் என்பதனை நீங்கள் அறிவீர்கள். அவற்றை இங்கு பட்டியலிடுதல் அவசியமில்லை.

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிவாகை சூடப்போவது மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷவே என்பது உறுதியாகியுள்ள இவ்வேளையில் நாமும் எமது வாக்குகளை அவருக்கே வழங்கி எமது எதிர்கால வாழ்க்கையைச் சுபீட்சமாக்கிக் கொள்வோம். வெற்றிபெறப்போகும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களித்து அவரது வெற்றியில் பங்காளிகளாவதன் மூலம் எமது சுபீட்சமான வாழ்வை மேம்படுத்தும் வாய்ப்புக்களை உரிமையோடு கேட்டுப்பெறமுடியும்.”