செய்திகள்

நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்க எதிர்பார்ப்பு’

தற்போதுள்ள நிறைவேற்று அதிகாரங்களை மேலும் குறைக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு பெற்றுக் கொடுக்க தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையின் முதலாவது மற்றும் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அவற்றை உருவாக்கிய அரசாங்கங்களுக்கு  மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்பட்டது. அதனால், அக்கட்சியின் கருத்துக்கு அமைவாகவே அரசியலமைப்பும் உருவாக்கப்பட்டது. 2 ஆவது அரசியமைப்பு உருவாக்கப்பட்டபோது நானும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன்.
தற்போது தனியொரு கட்சிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதிகாரம் உள்ள பாராளுமன்றம் இல்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசியஅரசு தான் ஆட்சிப் பொறுப்பினை முன்னெடுத்து வருகிறது.  எனவே, இதில் ஐக்கிய தேசியக் கட்சியினதோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ தனித்த கருத்துகளில் சட்டவரைவு அமைக்கப்படாது. அனைவருக்கும் பொதுவான ஒரு அரசியலமைப்பே இம்முறை உருவாக்கப்படும்.
அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றம் அரசியலமைப்ப பேரவையாக கூடுகின்றது. அதன் பின்னர் இந்த அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பது தொடர்பில் இந்த பேரவை ஆராயவுள்ளது. குறிப்பாக இந்த அரசியலமைப்பு இலங்கையர் என்ற அடையாளத்தையும் மக்களின் இறைமையையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இலங்கையர் என்ற அடையாளத்தினூடாக அனைவரும் சமமானவர்கள் எனக் கருதப்படுவர். அவ்வடையாளத்தின் பிரதிபலனை அனைத்து இலங்கையர்களும் அனுபவிக்க வேண்டும். சகல மக்களும் சமய, கலாசார உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும்.
அடுத்ததாக மக்களின் இறைமையினூடாக சகல மக்களினதும் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மக்களின் இறைமையென்பது பெரும்பான்மையினரின் விருப்பத்திற்குரிய விடயமல்ல. அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகளை வழங்குவதே இறைமையாகும். அடுத்ததாக சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறாக அரசியலமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை  நாம் தற்போது முன்னெடுத்து கொண்டிருக்கின்றோம். மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்காக குழுவொன்றை நியமித்துள்ளோம்.
அந்தக் குழுவின் ஆலோசனைகள் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம்.
தற்போதைய அதிகாரங்களை மேலும் குறைக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு பெற்றுக் கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
 அடுத்ததாக 2 ஆவது பேரவையொன்று அவசியமா? என்பது குறித்து காணப்படும் வாதங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்ததாக அதிகாரப்பகிர்வு குறித்து பார்க்க வேண்டும்.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான அதிகாரப் பகிர்வை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் எமது நாட்டுக்குப் பொருத்தமான சித்தாந்தம் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அதிகாரத்தைப் பகிர்வது மட்டுமன்றி அதை பன்முகப்படுத்துவது குறித்தும் அவதானம் செலுத்தவேண்டும். அத்தோடு தேவைக்கு மேலதிகமாக அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்தும் ஆராய வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.
n10