செய்திகள்

நிலநடுக்க ஆபத்தில் சென்னையின் 80 சதவீத கட்டடங்கள்

சென்னையில் உள்ள 80 சதவீத கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டது அல்ல என்றும், சென்னையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட இந்த கட்டடங்கள் இடிந்துவிழக்கூடிய அளவிலேயே உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்திய நிபுணர்கள் குழு, கடந்த 2011 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

“சென்னையில் உள்ள பெரும்பாலான வீடுகள் தரைதளம் மற்றும் ஒரு மாடி வீடுடன் கூடியதாகவே உள்ளது. இந்த வீடுகளில் பெரும்பாலானவை முறையான என்ஜினியர்களால் கட்டப்பட்டதில்லை. கட்டுமான பொறியாளர்கள் யாரையும் நியமித்து வீட்டு உரிமையாளர்கள் இந்த வீடுகளை கட்டவில்லை. அங்கீகரிக்கப்பட்ட ‘பிளான்’ ( plan) படியும் இந்த வீடுகள் கட்டப்படவில்லை.

முறையான வடிவமைப்பில் கட்டப்படாத இந்த 80 சதவீத கட்டடங்களும் எந்த நேரத்திலும் இடிந்துவிழக்கூடிய அளவில்தான் உள்ளது” என அண்ணா பல்கலைக்கழகத்தின் பேரிட மேலாண்மை மற்றும் மட்டுப்படுத்துதல் மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகாய பார்வையில் ( aerial view) எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விரிவான திரையிடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கூறிய மையம், சென்னையில் உள்ள குறைந்தபட்சம் மூன்று மாடிகளை கொண்ட 22,758 கட்டடங்களை ஆய்வு செய்ததில், இவற்றில் 29 சதவீத கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டதில்லை என தெரியவந்துள்ளது. அதே சமயம் மூன்று மாடிகளுக்கும் குறைவான சிறிய கட்டடங்கள் இன்னும் மோசமாக உள்ளதாகவும், இவையெல்லாம் பொறியாளர்களின் பங்களிப்பு இல்லாமல், வெறும் கொத்தனார்களால் மட்டுமே கட்டப்பட்டுள்ளதாகவும், கட்டிமுடித்த பின்னர் ‘இந்த கட்டடம் பாதுகாப்பானதுதான்’ என பொறியாளரிடமிருந்து சான்று பெறுவது எளிதான ஒன்றுதான் என்றும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் வருவாய் துறையினரிடம் சமர்ப்பிக்கப்பட்டும், அந்த அறிக்கை இன்னமும் அரசாங்கத்தின் மேஜைகளில் தூங்கிக்கொண்டுதான் உள்ளது. குறைந்த பட்சம் இத்தகைய கட்டடங்களில் வசிப்பவர்களை எச்சரிக்கும் நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளவில்லை.

இதுபோன்ற ஆய்வறிக்கை மற்றும் இந்திய தர நிர்ணய கழகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு பின்னரும் கூட, வீடு கட்டும்போது நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டதாக கட்டுவது கட்டாயம் என்ற அறிவிப்பையோ அல்லது உத்தரவையோ தமிழக அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில், முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கியது போன்று நிலநடுக்க பாதிப்பை தடுக்கும் வகையிலான கட்டட அமைப்பும் அவசியம் என்ற விதிமுறையை கட்டாயமாக்க வேண்டும் என்கிறார் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரி ஒருவர்!

அதேப்போன்று கட்டுமான துறை வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், அரசு விதிமுறைகளை கட்டாயமாக்கினாலும், அவை அமல்படுத்தப்பட்டுள்ளனவா? என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு அரசிடம் பணியாளர்கள் எண்ணிக்கை இல்லை என்கின்றன. .

கட்டடம் கட்டும் பில்டர், ஒரு பிளானை சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் சமர்ப்பித்தால், அந்த பிளான்படிதான் அந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதா? என்பதை யாருமே உறுதிப்படுத்துவதில்லை என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத பொறியாளர் ஒருவர்.

வந்தபின் அலறுவதை விட வரும் முன்னரே சுதாரித்துக்கொள்வது நல்லது. அரசாங்கத்திற்கும், பில்டர்களுக்கும் இது விஷயத்தில் பொறுப்பு உள்ளதென்றாலும், வீடு கட்டுபவர்களும் உஷாராகிக் கொள்ள வேண்டும்.