செய்திகள்

நிலாந்தனுக்கு எதிராக பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டானது ஊடக சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் சுதந்திர ஊடகவியயலாளரான நிலாந்தனுக்கு எதிராக சிவில் அதிகாரியொருவரால் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டானது ஊடக சுதந்திரத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த நிலாந்தன் மாவட்ட சிவில் நிர்வாகம் தொடர்பாக எழுதிய விமர்சனமொன்று அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பாக மாவட்ட செயலக அதிகாரியொருவரால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில,; குறித்த விமர்சனத்திற்கு பதில் அளிப்பதை விடுத்து பொலிஸ் விசாரணை மூலம் ஊடகவியலாளருக்கு எச்சரிக்கை விடுக்க முற்படுவதாக தனது வன்மையான கண்டணத்தையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தம் மற்றும் யுத்த அனர்த்தங்களினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும்.குறிப்பாக இந்த அனர்த்தங்களினால் மிகப்பெரும் பாதிப்புகளை தமிழ் சமூகம் எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அந்த மக்களின் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியான கவனங்களை ஊடகவியலாளர்களாகிய நாங்கள் மேற்கொண்வருகின்றோம்.அதற்கு ஏற்படும் இடையூறுகளை வெளிக்கொணர்வதும் ஊடகவியலாளர்களின் கடமையாகும்.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரச அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பிலும் அதன்போது மக்கள் எதிர்கொண்ட கஸ்டங்கள் தொடர்பில் தமது கருத்தினை நிலாந்தன் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக பதிவுசெய்துள்ளார்.அது ஊடகவியலாளரின் கடமையாகும்.

எப்போதும் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.அதற்கு மாறாக சிவில் அதிகாரி குறித்த ஊடவியலாளரை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணைசெய்யவேண்டும் என்று மேற்கொண்டுள்ள நடவடிக்கையினை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெளியிட்ட கருத்து ஒன்றிணையும் மாவட்ட சிவில் அதிகாரிக்கு ஞாபகம் ஊட்ட விரும்புகின்றோம். அதாவது தம்மீது தொடர்பிலும் எதுவும் விமர்சனங்கள் இருந்தாலும் ஊடகவியலாளர்கள் அவற்றினை வெளியிடவேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இதுவே கருத்துச்சுதந்திரம் ஆகும்.ஆனால் ஒரு அரச அதிகாரி கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்வது எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது கருத்துகளை வெளிப்படுத்தமுடியாத நிலைமையினையே ஏற்படுத்தும் என்பதை உரிய அதிகாரிகள் உணர்ந்துசெயற்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

n10