செய்திகள்

‘நிலாவே வா’ (மெளனராகம்) பாடலில் திருப்தி அடையாத இளையராஜா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் டி20 நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. சரணும் பாடகர் கார்த்திக்கும் மெளன ராகம் படத்தின் இரு பாடல்களைப் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

நிலாவே வா பாடலைத் திரையில் பார்த்துவிட்டு எஸ்பிபி சொன்னாராம், இது சோகப்பாடலா, என்னிடம் சொல்லவேயில்லையே! (அநேகமாக இந்தப் பாட்டை அவர் ஜாலியாகக்கூட பாடியிருக்கலாம் – சரண்) எஸ்பிபி பாடும்போது மணி ரத்னம், இளையராஜா ஆகிய இருவரும் ஸ்டூடியோவில் இல்லாததால் என்னவிதமான சூழலில் பாடல் படமாக்கப்படும் என்று தெரியாமலே பாடியிருக்கிறார்.

நிலாவே வா பாடலைப் பற்றி மணி ரத்னம் கார்த்திக்கிடம் சொன்னது:

இந்தப் பாடலின் ரெக்கார்டிங் முடிந்தபிறகு ராஜாவுக்குத் திருப்தி வரவில்லையாம். நான் வேற பாட்டு தரேன் என்றாராம். ஆனால் மணி ரத்னம், இந்தப் பாடலுக்கு என்ன குறைச்சல், எனக்கு இதுவே போதும் என்று சொல்லிவிட்டார். இதற்குச் சம்மதிக்காத இளையராஜா பிறகு இசையமைத்ததுதான் மன்றம் வந்த தென்றலுக்கு பாடல். நிலாவே வா பாடலுக்குப் பதிலாக இந்தப் பாடலைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று மணி ரத்னத்திடம் சொல்லியிருகிறார்.

மணி ரத்னத்துக்கு இரண்டு பாடல்களையும் பிடித்துவிட்டது. முக்கியமாக நிலாவே வா பாடல் மீது முழுத் திருப்தி. கடைசியில் அவர் இளையராஜாவிடம், எனக்கு இந்த இரண்டு பாடல்களும் வேண்டும். நிலாவே வா அப்படியே இருக்கட்டும், மன்றம் வந்த தென்றலுக்குப் பாடலை எப்படியாவது படத்தில் நுழைத்துவிடுகிறேன் என்று சொல்லி இரண்டையும் படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.