செய்திகள்

நிஷா பிஸ்வால் அடுத்த வாரம் இலங்கை வருகின்றார்: முக்கிய சந்திப்புக்களுக்கும் ஏற்பாடு!

தெற்கு மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில்இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை வெளிவரவுள்ள நிலையில் இவரது விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கு வருகை தரும் உதவி இராஜாங்க செயலாளர் அரசிலுள்ள முக்கியஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்துவார்.

ஜனாதிபதி பராக் ஒபாமா இவ்வார முற்பகுதியில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, இலங்கையில் ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். பிஸ்வால் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பான வலியுறுத்தலை இவ் விஜயத்தின் போது விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விரைவில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு இராஜாங்க செயலாளர் உட்பட திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முன்பாக இந்த விஜயம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் இலங்கை வந்த நிஷா, போர்க் குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் போதுமானதாக இல்லை எனவும், சர்வதேச விசாரணை குறித்தும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தற்போது புதிய அரசு பதவியேற்று மீண்டும் உள்நாட்டு விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கும் என்பதை இவரது விஜயம் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.