செய்திகள்

யாழில் இடம்பெற்ற ‘நீதிக்கான பேரணியில்’ எழுச்சி கொண்ட தமிழ் மக்கள்

பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் அணிதிரண்டு இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பிலான ஐ. நா விசாரணை அறிக்கை திட்டமிட்டபடி மார்ச்சில் வெளியிடப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதுடன் போர்க்குற்றம் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை வெறுமனே கால விரயத்துக்கு மட்டுமே வழிகோலும் என்றும் அதனை முழிமையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மறை மாவட்ட அயர் இராயப்பு ஜோசப், தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ் .பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்று பல முக்கியஸ்தர்களும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பல தமிழ் அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஆதரவுடன் யாழ் பல்கலைக்கழக சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊர்வலம் யாழ். பல்கலைக்கழக பிரதான வாயிலில் இருந்து ஆரம்பித்து நல்லூரில் முன்னர் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவு ஸ்தூபிக்கு அருகில் நிறைவடைந்தது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்காட்டுவதற்கு இன்றைய பேரணியில் காட்டிய அதே ஆதரவையும் ஒற்றுமையையும் எதிர்வரும் காலங்களிலும் தமிழ் மக்கள் காட்ட வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர் . இராசகுமாரன் பேரணி நிறைவில் உரையாற்றும் போது தெரிவித்தார். வேற்றுமைகளை உதறி எறிந்து தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டத்தை முன்னகர்த்தி செல்வதற்கு அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்றும் கூறிய அவர், “எவரும் தமிழ் மக்களின் ஜனநாயக போராட்டத்தை நசுக்க முடியாது என்பதை முழு உலகத்துக்கும் காட்டுவோம் என்றும்” தெரிவித்தார்.

தீலீபன் ஸ்தூபிக்கு அருகில் நின்று உரையாற்றிய இராசகுமாரன், ஐ. நா மனித உரிமைகள் சபை ஆணையாளர் சயீத் ராட் அல் ஹுசைனுக்கு அனுப்புவதற்கான மகஜரினை கொழும்பில் உள்ள ஐ. நா வதிவிடப்பிரதிநிதி சுபினே நன்டியிடம் வழங்கும் பொருட்டு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் சைவ குருக்கள்மார் சங்கத்தி சேர்ந்த வாசுதேவ குருக்களிடமும் கையளித்தார்.

இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியாகும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை மீதான விசாரணை அறிக்கையை தாமதப்படுத்தி அதனை செப்ரெம்பர் மாதத்திற்கு பிற்போட்டமைக்கு நாம் எமது ஆழ்ந்த விசனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இந்த அறிக்கை திட்டமிட்டபடி வெளிவரவேண்டும் என்பதையே நாம் விரும்புகிறோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டின் போரின் போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் அறிக்கை பிற்போடப்படுவதை தாங்கள் பரிந்துரை செய்துள்ளதாக நாம் புரிந்துகொள்கிறோம்.

அரசாங்கத்தின் நடைமுறையிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பையும் (யுத்தத்திற்குத் தீவிர பங்காற்றியவர்கள் உட்பட), கடந்த கால உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் நீதியை நிலைநாட்டத் தவறியமை தொடர்பான வரலாற்றையும் கருத்தில் கொண்டு நோக்கும்போது, இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்படவல்ல எந்தவொரு உள்நாட்டுப் பொறிமுறையிலும் எமக்கு நம்பிக்கை இல்லை என்பது தெளிவு.

இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்ற சிங்கள பௌத்த தலைமைத்துவங்கள் தொடர்பிலான எமது நீண்ட கால அனுபவத்தில், இலங்கை ஆயுதப் படைகளைச் சார்ந்த அங்கத்தவர்கள் எந்தக் குற்றங்களுக்காகவும் உள்நாட்டில் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

உள்நாட்டு விசாரணை மீதான சர்வதேச மேற்பார்வை வெறும் கால வீரியத்திற்கு மட்டுமே வழிகோலும் என்பதையும் அறிவோம். தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தமை மூலம் மஹிந்தவுக்கு எதிரான தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தின் ஊடாக பாரிய ஒரு மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் நாம் வாக்களிக்கவில்லை.

ஜனாதிபதி சிறிசேன ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஒரு மாத காலப் பகுதி தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திடம் இருந்து புதிய மாற்றங்கள் எதனையும் எதிர்பார்க்கமுடியாது என்பதை நிரூபித்துவிட்டது.

நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளான இராணுவ மயமாக்கம், மக்கள் தம் சொந்தக் கிராமங்களில் குடியேறல், காணாமல் போனோர் மற்றும் சட்டவிரோத தடுப்புக் காவல் சம்பந்தப்பட்டோர் பிரச்சினைகள் தொடர்பில் சிறிசேன அரசாங்கத்தால் குறிப்பிடக்கூடிய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட 100 நாள் நிகழ்ச்சித் திட்டத்தில் இப்பிரச்சினைகள் உள்ளடக்கப்படவும் இல்லை. அரசியல் தீர்வுக்கான பேச்சைக் கூட சிறிசேன அரசு மேற்கொள்ளவில்லை.

ஆகவே, மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இலங்கை மீதான தம் விசாரணையை, தகவல் தருவோருக்குப் போதிய பாதுகாப்பு சர்வதேச விசாரணையாளர்களால் மேற்கொள்ள இலங்கை வர அனுமதி கோரி, இதன் மூலம் ஒரு முழுமையான – முறையான அறிக்கைத் தயாரிப்பதற்கு உதவும் வகையில், ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கபட்டதையடுத்து சர்வதேச விசாரணைக்கு இட்டுச் செல்லும் வகையில் அவசியமான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்குமாறு தங்களை வேண்டுகின்றோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19