செய்திகள்

நீதித்துறையை பாராட்டிய கோட்டா !

உண்மைக்காக தைரியமாகக் குரல் கொடுத்த கௌரவமான நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அதனை தடுக்கும் வகையில் தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி கோட்டாபய ராஜபக்ஷவினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அந்த மனுவை விசாரிக்கும் வரையிலும் அவரை கைதுசெய்வதற்கு இடைக்கால தடை விதித்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடர்பில் தனது முகப்புத்தக கணக்கில் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘இலங்கைக்கு நல்லது செய்வதில் நான் ஒருபோதும் பின்நின்றதில்லை. ஓர் அரசாங்க உத்தியோகஸ்தராக, எனது கடமைகளை ஒழுங்காகச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தேன். அதில், எமது தாய் நாட்டில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நாம் பெரும்பாடு பட்டோம். அதில் கண்ட வெற்றியை எண்ணி பெருமையடைகிறோம்.

என்னுடைய உயிரைத் தியாகம் செய்து நான் மேற்கொண்ட தீர்மானங்கள் தொடர்பில் ஒருபோதும் நான் கலங்கியதில்லை. அதனாலேயே, இனி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுதந்திர இலங்கைக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. உண்மைக்காக தைரியமாகக் குரல் கொடுத்த கௌரவமான நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக சட்டத்தரணிகள் குழுவுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்றும் இன்றும் என்றும் எனது தாய் நாட்டுக்காக நான் அர்ப்பணிப்புடனேயே செயற்படுவேன் என மேலும் தெரிவித்துள்ளார்.