செய்திகள்

”நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை”

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நீதிபதி ரி.சரவணராஜாவுக்குச் சட்டமா அதிபர் அழுத்தம் கொடுத்தார் என்று வெளியாகிய செய்திகள் அடிப்படையற்றவை. அத்துடன் இந்த நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கவில்லை என்று நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்றும் நீதியமைச்சர் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி அதில் உயிர் அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தான் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிகளுக்கு மன அழுத்தம் இருப்பது வழமை. மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும். நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. உரிய தீர்மானத்தை ஆணைக்குழு எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த விடயத்தில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றார்.

-(3)