செய்திகள்

நீதிமன்றத் தாக்குதல் தொடர்பில் மேலும் ஒருவர் கைது:மற்றொருவர் பொலிஸாரைத் தாக்கி விட்டுத் தப்பியோட்டம்

யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரொருவர் நேற்று 15 ஆம் திகதி திங்கட்கிஜழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் ஒருவர் சிவில் உடையில் சென்ற பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்ய முயலவே பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அவர்களைத் தாக்கி விட்டுத் தப்பியோடித் தலைமறைவாகி விட்டார்.

யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களை ஆதாரமாகக் கொண்டு பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.மேலும் சிலரைப் பொலிஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தேடுதல் நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைச் சேர்ந்த மேலுமொரு இளைஞர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.இவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாணைக்கு உட்படுத்தப்பட்டார்.

குறித்த தமாக்குதல் சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரத்தின் படி நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த மேலும் ஒருவர் பொலிஸாரால் இனங்காணப்பட்டு சந்தேகநபரைக் கைது செய்வதற்குச் சென்ற போது பொலிஸாரைத் தாக்கி விட்டுச் சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.இதன் பின்னர் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டுத் தப்பியோடிய நபர் தீவிரமாகத் தேடப்பட்ட போதும் பொலிஸாரிடம் அவர் சிக்கவில்லை.
யாழ்.நகர் நிருபர்-