செய்திகள்

நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி ரணிலுக்கு அழைப்பாணை

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணையொன்றை விடுத்துள்ளது. கட்சியின் முன்னாள் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க தம்மை பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை பரிசீலனைக்கு எடுத்த நீதிமன்றம், இந்த வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அன்றைய தினத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரும் அழைப்பாணையை விடுத்தது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிகார, உபாலி அபேரத்ன ஆகியோர் முன்னிலையில் திஸ்ஸ அத்தநாயக்கவின் மனு விசாரணைக்கெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஐக்கிய தேசிய கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோருடன் கட்சியின் செயற்குழு உறுப்பினர் அனைவரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் சமயத்தில் போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டின் மீது தாம் விளக்கமறியலில் இருந்த காலப்பகுதியில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கான கடிதம் பிணையில் வெளிவந்ததன் பின்னர் கிடைக்கப் பெற்றதாக திஸ்ஸ அத்தநாயக்க மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு கட்சி தனக்கு சந்தர்ப்பமளிக்கத் தவறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறும், தொடர்ந்தும் தாம் கட்சி உறுப்பினரென அறிவிக்குமாறும் திஸ்ஸ அத்தநாயக்க மனுவில் கோரியுள்ளார்.

இதேவேளை திஸ்ஸ அத்தநாயக்க மீதான போலி ஆவணம் தயாரிப்புக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது போலி ஆவணம் தயாரித்தமை தொடர்பான விசாரணை இன்னமும் நிறைவடையவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றுக்குத் தெரிவித்தது.
இதனடிப்படையில் வழக்கு விசாரணை ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் பின்னர் திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றப் பகுதியில் நின்ற ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில்; கட்சியின் இந்த நடவடிக்கை தம் மீதான அரசியல் பழிவாங்கலாகுமெனவும் வழக்கு விசாரணை முடியும் வரை மேலதிகமாக எதனையும் கூற முடியாது. ஆனால் எதிர்காலத்தில் அரசியல் தொடர்பில் தாம் தீர்மானமொன்றை எடுப்பது தவிர்க்க முடியாதது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.