செய்திகள்

நீதிமன்ற தாக்குதல் தொடர்பில் கைதானவர் விளக்கமறியலில்

யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீதான தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தாக்குதல் சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களைக் கொண்டு நேற்று முன்தினம் 15 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்.பிறவுண் வீதியைச் சேர்ந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று அவர் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.இதன் போதே குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பெருமாள் சிவகுமார் உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கெதிராக யாழ்.நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் பின்னர் வன்முறையாக மாறியது.இதன் உச்சக்கட்டமாக யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதி மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.குறித்த தாக்குதல் சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களைக் கொண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்த வண்ணமிருக்கிறது. யாழ்.நகர் நிருபர்-