செய்திகள்

நீதியை நிலைநாட்டுவதற்கான ஒற்றை சந்தர்ப்பமே விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு: மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு எச்சரிக்கை

நீதியையும் நிலையான சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கான ஒரு ஒற்றை சந்தர்ப்பமே ஐ.நா விசாரணை அறிக்கையின் செப்டம்பர் வரையிலான ஒத்திவைப்பு என்று இலங்கை அரசாங்கத்தை எச்சரித்திருக்கும் ஐ. நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் சயித் ராட் ஹுசைன், பொறிமுறைகளை வரையும்போது பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்குமாரும் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஜெனீவாவில் இன்று வியாழக்கிழமை மனித உரிமைகள் சபையின் 28ஆவது கூட்டத்தொடரின்போது வருடாந்த அறிக்கையினை சமர்ப்பித்து உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர், நீதியை முன்னெடுத்து செல்லும்பொருட்டு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் களத்திலே ஈடுபடவிருப்பதாகவும் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்ட மாற்றம், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கிடைத்துள்ள ஒத்துழைப்பு மற்றும் புதிய தகவல்கள் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் ஆகியவற்றை கருத்ஹ்டில் கொண்டே விசாரணை அறிக்கையின் நிபுணர்களின் சிபார்சுக்கு அமைவாக அறிக்கையினை வெளியிடுவதை எதிர்வரும் செப்ரெம்பர் வரை ஒத்திவைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மை மற்றும் நீதி ஆகியவற்றுக்கான ஐ. நாவின் விசேட பிரதிநிதி, பலவந்தமாக காணமல் போனவர்கள் தொடர்பிலான ஐ. நா வின் செயற்குழு உட்பட தன்னையும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைத்திருப்பதாகவும் சயித் தனதுரையில் தெரிவித்தார்.