செய்திகள்

நீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய நோர்வே நிபுணர்கள் வருகை: ஐங்கரநேசனுடன் சந்திப்பு

வலிகாமம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளது தொடர்பாக ஆராய்வதற்காக நோர்வே நாட்டு நிபுணர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக வடக்கு விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனை அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.

நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் கலந்துள்ளதுபற்றி ஆராய்வதற்காக வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய நிபுணர்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்ட இந் நிபுணர்குழு நிலத்தடியில் எண்ணெய் மாசின் மூலம், அது பரவும் திசை, நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் மாசின் அளவு, எண்ணெய் மாசில் அடங்கியுள்ள இரசாயனக் கூறுகள், மாசு பரவுவதைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் குடிநீரைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து வருகின்றது.

01இந்நிபுணர்குழு, ஆய்வின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு வேறு துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்வதோடு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்தும் உதவிகளையும் பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் குடிநீரில் எண்ணெய் கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட இடங்களில் நீரின் மாதிரிகளைச் சேகரிப்பதற்காக ஏற்கனவே கொழும்பில் உள்ள கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியை நிபுணர்குழு நாடியிருந்தது. மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற இந்நிறுவனம் வலிகாமத்தில் இருந்து நீர் மாதிரிகளைச் சேகரித்து கொழும்புக்குக் கொண்டுசென்று பகுப்பாய்வில் ஈடுபட்டுள்ளது.

நிலத்தடியில் எண்ணெய்க் கழிவு தேங்கியிருப்பின் அதன் சரியான அமைவிடத்தைக் கண்டறிவதற்கு தரையை ஊடுருவும் ரேடார் அவசியமானதாகும். இத்தகைய ரேடார் ஒன்றை நோர்வே அரசாங்கம் இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதால், நிபுணர்குழு ரேடார் வசதியை ஏற்படுத்தித் தருமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திடம் விண்ணப்பித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே இன்று கொழும்பில் இருந்து நோர்வே புவித் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இலியாட் ரன்பிறிட்ஜ், ரஜீந்தர் குமார் பசின் ஆகியோரும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான எச்.டி.எஸ்.பிறேமசிறி, தயான் முனசிங்க, சதுரங்கா குமாரசிறி, டி.எச்.வீஜே விக்கிரமா ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

தரையை ஊடுருவும் ரேடாரைப் பயன்படுத்துவது தொடர்பான களநிலைகளை ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருக்கும் நோர்வே நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இன்று வடக்கு அமைச்சர் பொ.ஐங்கரநேசனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாணசபை நியமித்த நிபுணர்குழுவைச் சோந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியற் பீடத்தின் தலைவர் கலாநிதி அ.அற்புதராஜா, புவியியற் பீடத்தைச் சேர்ந்த திட்டமிடலாளர் செ.ரவீந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். இச்சந்திப்பின் பின்னர் நோர்வே நிபுணர்குழுவினர் வடமாகாண நிபுணர்குழவினருடன்; இணைந்து சுன்னாகம் அனல் மின்நிலையப் பகுதியையும் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.

1 (5)