செய்திகள்

நீர்மூழ்கி கப்பல்களுக்கு இலங்கை அனுமதி அளிக்க வேண்டும்: எதிர்பார்க்கிறது சீனா

கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தனது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு இலங்கை அனுமதியளிக்க வேண்டுமென சீனா எதிர்பார்க்கிறது. புதிய அரசாங்கத்திடமிருந்து இதனை எதிர்பார்ப்பதாக நேற்று திங்கட்கிழமை சீனா தெரிவித்திருக்கிறது.

கடந்த வருடம் சீனாவின் நீர்மூழ்கிகள் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது மீண்டும் இடம்பெற கொழும்பிலுள்ள புதிய அரசாங்கம் இடமளிக்கமாட்டாது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்ஷவின் முன்னைய நிர்வாகம் கொண்டிருந்த அணுகுமுறையிலும் பார்க்க வேறுபட்ட அணுகுமுறையை புதிய அரசு கடைப்பிடிக்குமென பெய்ஜிங்கிற்கான இருநாள் விஜயத்தின் பின்னர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

செப்டெம்பர் நடுப்பகுதியிலும் பின்னர் அக்டோபரில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த தருணத்திலும், கொழும்பில் சீன நீர்மூழ்கிகள் தரித்து நின்றமை இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியிருந்தது.

“இலங்கைக்கு ஜப்பானியப் பிரதமர் விஜயம் செய்யவிருந்த தினத்தில் கொழும்பு துறைமுகத்தில் சில நீர்மூழ்கிகள் வருகைதந்திருந்த சூழ்நிலை ஏன் ஏற்பட்டிருந்தது என்பதை உண்மையில் நான் அறியேன். ஆனால் எமது ஆட்சிக்காலத்தில் எந்தத் தரப்பிலிருந்தென்றாலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாமலிருப்பதை நாம் உறுதிப்படுத்துவோம்” என்று பெய்ஜிங்கில் நிருபர்கள் மத்தியில் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் தொடர்பான கேள்வியொன்றுக்கு நேற்று திங்கட்கிழமை பதிலளித்திருக்கும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுயா சுன்யிவ், ஏடன் குடாவுக்கும் சோமாலியாவுக்கும் செல்லும் வழியில் எரிபொருள் நிரப்ப நீர் மூழ்கி இலங்கைத் துறைமுகத்திற்கு சென்றிருந்ததாகக் கூறியுள்ளார். கடந்த வருடம் சீன இராணுவமும் இதனைத் தெரிவித்திருந்தது.

“இவை சாதாரணமானதும் வெளிப்படையானதுமான நடவடிக்கையாகும். சர்வதேச நடைமுறைகளும் இதன்போது பின்பற்றப்பட்டிருந்தது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். சீனா உட்பட நாடுகளின் நீர்மூழ்கிகள் நங்கூரமிடுவதை இலங்கை “வரவேற்கும்” என்பது சீனாவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முன்கூட்டியே நாங்கள் இலங்கைத் தரப்பின் இணக்கத்தைப் பெற்றிருந்தோம். உலகளாவிய ரீதியில் கடற்கொள்ளைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதும், நட்பு நாடுகளின் நீர்மூழ்கிகள் வருகை தருவதை வரவேற்பதும் இலங்கைத் தரப்பின் கொள்கையாக இருக்கிறது என்பது நான் அறிந்த விடயமாகும், என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.